![கோப்புப் படம்](http://media.assettype.com/dinamani%2F2025-01-06%2Fl85lxozi%2FOmicron-delta-virus091100.jpg?rect=0%2C46%2C450%2C253&w=480&auto=format%2Ccompress&fit=max)
தமிழகத்தில் இருவருக்கு எச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை இன்று (ஜன. 6) அறிவித்துள்ளது.
'ஹியூமன் மெடாநியூமோவைரஸ்' எனப்படும் எச்எம்பிவி தொற்று புதிதல்ல என்றும், பல ஆண்டுகளாக இந்த வைரஸ் இருப்பதால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் பரவிவரும் எச்எம்பிவி தொற்று இந்தியாவில் முதல்முறையாக கர்நாடகத்தில் 2 குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டது. குஜராத்தில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே தமிழ்நாட்டில் இருவருக்கு எச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாவது,
சென்னையில் ஒருவருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் எச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருவரின் உடல்நிலை சீராக உள்ளது. பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
எச்எம்பிவி தொற்று குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.இந்த வைரஸ் தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை ஆலோசனை நடத்தியுள்ளது.
2001 ஆம் ஆண்டு முதல் இந்த வைரஸ் உள்ளது. இதனால் மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எச்எம்பிவி தொற்று கரோனா வைரஸ் போன்றதல்ல என தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் ஆலோசகர் செளமியா சாமிநாதன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு.. மீண்டும் பொதுமுடக்கம் வருமா?