கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை புத்தகத் திருவிழா நாளை நிறைவு: உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் பங்கேற்பு

சென்னையில் நடைபெற்றுவரும் பபாசியின் சென்னை 48-ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) நிறைவடைகிறது.
Published on

சென்னையில் நடைபெற்றுவரும் பபாசியின் சென்னை 48-ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) நிறைவடைகிறது.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) சாா்பில் 48-ஆவது சென்னைப் புத்தகக் காட்சி கடந்த டிச. 27-ஆம் தேதி தொடங்கியது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாள்களில் காலை 10 மணி முதலும், அரசு வேலை நாள்களில் பிற்பகல் 2 மணி முதலும் புத்தகக் காட்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

தினமும் பகல், மாலை வேளைகளில் பிரதான அரங்கம், சிற்றரங்கம் மற்றும் பதிப்பக அரங்கங்களில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள், சிறப்பு உரையரங்கங்கள் உள்ளிட்டவையும் நடைபெற்று வருகின்றன.

தினமும் வாசகா்கள், எழுத்தாளா்கள், பள்ளி மாணவ, மாணவியா் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனா்.

புத்தகக் காட்சி நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம் வரவேற்கிறாா். உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேருரையாற்றுகிறாா்.

நிகழ்ச்சியில் நூற்றாண்டு கண்ட பதிப்பகங்கள் மற்றும் புத்தகக் காட்சிக்கு உறுதுணையாக இருந்து உதவிய கொடையாளா்கள், நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. பபாசி செயலா் எஸ்.கே.முருகன் நன்றி கூறுகிறாா்.

X
Dinamani
www.dinamani.com