
கிண்டி சிறுவர் பூங்காவில், வாட்ஸ் அஃப் வழியே நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில், பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது எதிர்பார்க்கப்படும் கூட்டத்தை நிர்வகிக்கவும், பார்வையாளர்களுக்கு அதிக வசதியை அளிக்கவும் வாட்ஸ்அப் (Whatsapp) டிக்கெட் வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
8867609954 என்ற எண்ணுக்கு “ஹாய்” "Hi" செய்தியை அனுப்புவதன் மூலம், பார்வையாளர்கள் தேவையான விவரங்களைப் பதிவேற்றலாம் மற்றும் தங்களின் மொபைல் போன்களில் நேரடியாக தங்கள் நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கலாம்.
இந்த முயற்சியானது தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதி செய்கிறது. டிக்கெட் கவுண்டர்களில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கிறது மற்றும் பார்வையாளர்களின் திருப்திக்காக டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்டி சிறுவர் பூங்கா சென்னையிலுள்ள முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும், ஆண்டுதோறும் 7 முதல் 8 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.
மேலும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளைச் சேர்ந்த 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
கடந்த ஆண்டு 30 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இந்தப் பூங்காவில் 2800 சதுர மீட்டர் பரப்பளவில் மிகப்பெரிய நீர்வாழ் பறவைக் கூடம், வன உயிரின விழிப்புணர்வு மையம், விலங்குகள் மற்றும் பறவைகளின் விவரங்கள் அறிந்துகொள்ளும் வகையிலான LED மின் திரைகள், நூலகம், நிர்வாக கட்டடம், அழகிய நுழைவுவாயில், நீருற்றுகள், செல்பி பாயிண்ட், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, மழை நீர் வடிகால் வசதிகள், நடைபாதைகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பார்வையாளர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி கிடைக்கும் வகையில் நவீன கட்டமைப்புடன் கட்டப்பட்டுள்ள இரண்டு சிற்றுண்டி கூடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், புதிய கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட வாகனம்
நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்ற வகையில் அவர்களின் தேவைகள் அறிந்து பூங்காவில் சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.