முதல்வர் ஸ்டாலினின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

பொங்கல் திருநாளையொட்டி உலகத் தமிழர் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on
Updated on
2 min read

பொங்கல் திருநாளையொட்டி உலகத் தமிழர் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், முத்தமிழ், முச்சங்கம், முக்கனி, மூவேந்தர், முக்கொடி கொண்ட தமிழரின் தனிப்பெரும் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாள் மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. நானிலம் போற்றும் இந்த நன் நாளினை எழுச்சியோடு இந்தப் புத்தாண்டில் கொண்டாட எதிர்நோக்கியுள்ள உலகத் தமிழர் அனைவருக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!

பொங்கல் விழா என்பது உழவை, உழைப்பை, சமத்துவத்தை, இயற்கையின் சிறப்பைப் போற்றும் விழா! தமிழரின் பண்பாட்டை, நாகரிகத்தை, வீரத்தைப் பறைசாற்றும் பெருவிழா! விளைச்சலின் இன்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் விழா! உற்றார், உறவினர், சுற்றம், நட்பு, ஊரார் உடன் கொண்டாடிக் களித்திடும் விழா!

பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை, வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு காலை உணவு தொடங்கி அவர்தம் ஆற்றலையும் அறிவினையும் பெருக்கிட நான் முதல்வன் வரை, மகளிருக்கு உரிமைத்தொகை தொடங்கி மாணவக் கண்மணிகளுக்குத் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் வரை என மூன்றாண்டுகளில் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்துள்ளது தமிழ்நாடு! பத்தாண்டு காலமாக உறங்கியிருந்த தமிழ்நாடு, இன்றைக்கு வீறுநடை போட்டு, அனைத்துத் துறைகளிலும் உயர்ந்து நிற்கிறது. எந்தப் பிரிவினரும் ஒதுக்கப்படவில்லை; எந்த மாவட்டமும் புறக்கணிக்கப்படவில்லை; எந்தத் துறையும் பின்தங்கி நிற்கவில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறும் அளவுக்குப் பரவலான, சமத்துவமான வளர்ச்சியை அடைந்து காட்டியிருக்கிறோம். நெருக்கடிகள் இல்லாமல் இல்லை; சோதனைகளை எதிர்கொள்ளாமல் இல்லை; இயற்கைப் பேரிடர்கள் தாக்காமல் இல்லை; பாரபட்சத்தால் பாதிக்கப்படாமல் இல்லை! அத்தனையையும் எதிர்கொண்டு சாதித்து வருகிறோம் என்பதுதான் நம் பெருமை! இன்றைக்கு மக்களின் பேராதரவோடு, கருத்தியல் களத்திலும், தேர்தல் களத்திலும் தொடர் வெற்றிகளைக் குவித்து, எதிரிகளின் கனவுகளைத் தவிடுபொடி ஆக்கி வருகிறோம்.

திராவிட மாடல் எனும் பாதுகாப்பு வளையம் அமைதி, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், முற்போக்குச் சிந்தனை, முன்னேற்றப் பாதை, கல்வி வளர்ச்சி எனத் தமிழ்நாட்டை இந்திய அளவில் முன்னணி மாநிலமாக மாற்றி வருகிறது. வெறும் கொண்டாட்ட நிகழ்வாக இருந்த பொங்கல் திருநாளைப் பண்பாட்டுப் படைக்கலனாகவுமே மாற்றிப் பண்படுத்திய இயக்கத்தின் வழிவந்த அரசு நமது அரசு. ஒற்றுமையோடும், வரலாற்று ஓர்மையோடும் நாம் ஒன்றிணைந்து நிற்கும் வரை தமிழ்நாட்டின் தனித்துவமும் மகத்துவமும் இந்திய ஒன்றியத்தில் தொடர்ந்து மின்னிடும்.

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

எழில் திராவிடம் எழுக! என்று எழுபதாண்டுகளுக்கு முன் முழங்கினார் தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா! அத்தகைய எழுச்சியை இன்றைய திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது. அவ்வெழுச்சி எந்நாளும் தொடர, தமிழ்நாடு எல்லா நிலையிலும் ஏற்றம் பெற உழைப்போம்! உள்ளமெங்கும் இல்லமெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும், தங்கட்டும்!

“உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து”

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார். இதை உணர்ந்த நமது அரசு, “உழவுத் தொழில் போற்றுதும்; உழவரைப் போற்றுதும்!” என்ற அடிப்படையில், உழவர்களின் மலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் தொடர்ந்து துணை நிற்கும். இச்சிறப்புமிகு நன்னாளில் விவசாய பெருங்குடி மக்கள் அனைவரையும் வாழ்த்தி வணங்குவோம்.

அனைவருக்கும் எனது உளம் நிறைந்த பொங்கல் - தமிழர் திருநாள் - திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com