அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளையை அடக்க வந்த அயர்லாந்து நாட்டுக்காரர்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளை அடக்க வந்த அயர்லாந்து நாட்டுக்காரரைப் பற்றி...
கான் அந்தோணி கான்லான்
கான் அந்தோணி கான்லான்
Published on
Updated on
1 min read

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு காளை அடக்க வந்த அயர்லாந்து நாட்டுக்காரரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, 3-வது நாள் (ஜன. 16) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுவருகிறது.

போட்டித் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் உறுதிமொழி ஏற்று காலை 8 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் முன்னிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மொத்தமாக 5,786 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 1000 காளைகளை களமிறக்க முடிவு செய்யப்பட்டது. 500 க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு களமிறக்கப்பட்டனர். வீரர்களுக்கான மருத்துவப் பரிசோதனையின் போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரும் அந்தப் பரிசோதனையில் கலந்துகொண்டார்.

யார் அவர்? என்று காவல் துறையினர் விசாரணை செய்ததில் சென்னையில் வசித்து வரும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான் அந்தோணி கான்லான் (54) என்பது தெரியவந்தது. மருத்துவப் பரிசோதனை செய்த நிலையில் அவருக்கு வயது அதிக இருப்பதால் அவரை மாடுபிடிக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால், அவர் சோகத்துடன் பார்வையாளர்கள் இருக்கையில் போய் அமர்ந்தார்.

இதுபற்றி கான் அந்தோணி கான்லான் கூறுகையில், “நான் 14-15 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறேன். பல முறை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க வந்திருக்கிறேன். ஜல்லிக்கட்டு சிறந்த விளையாட்டு என்று நினைக்கிறேன்.

ஸ்பெயினில் நடைபெறும் காளைப் பந்தயத்தையும் பார்க்கச் சென்றிருக்கிறேன். அமெரிக்காவில் ரோடியொவிலும் காளையை அடக்கும் பந்தயம் நடைபெறுகிறது. அதையும் நான் பார்க்கச் சென்றிருக்கிறேன். இது பாரம்பரியமான விளையாட்டு. அதனால், எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதனாலேயே, இதில் பங்குபெற விரும்புகிறேன். எனது உடல் நிலை நன்றாகத் தான் இருக்கிறது. நான் 26 கி.மீ., 42 கி.மீ. மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். என்னை விளையாடவிடாமல் செய்வது வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், பரவாயில்லை” என்றார்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பல்வேறு நாடுகளில் இருந்துவரும் வெளிநாட்டினர் கண்டுகளிப்பது வழக்கமானது. ஆனால், வெளிநாட்டினர் ஒருவர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துக்கொள்ள வந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com