மருத்துவம், பொறியியல் படிப்புகளில் பட்டியலினத்தவர் அதிகரிப்பதாக அமைச்சர் பெருமிதம்!

கடந்தாண்டில் பட்டியலின சமூக மக்கள் 84 விழுக்காடு பயனடைந்ததாகவும் அமைச்சர் மதிவேந்தன் பெருமிதம்
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன்
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன்X | Dr M. Mathiventhan
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் பட்டியலினத்தவரின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் படிக்கும் அருந்ததியர் சமூக மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆங்கில பத்திரிகை ஒன்று, சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதனைச் சுட்டிக்காட்டிய தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, ``தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களை கல்வி, பொருளாதார, சமூக, அரசியல் தளத்தில் வலிமையுள்ளவர்களாகவும், வளர்ச்சி அடைந்தவர்களாகவும் உயர்த்த வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் முதன்மை இலட்சியமாகும்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் சமூகநீதி உரிமைகளை நிலைநாட்டும் வகையில் திமுக அரசு பல்வேறு வகையான இடஒதுக்கீட்டு சட்டங்களை இயற்றி வரலாறு படைத்துள்ளது. சமத்துவ நோக்கோடு, பட்டியலின மக்களிடையே மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீட்டை 2009-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கிய உள்ஒதுக்கீட்டின் பயனால், அதுவரை கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் பெறாத அருந்ததியர் சமூக மக்கள், இன்றைக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்று வருகிறார்கள் என்பதை சமீபத்தில் வெளியான தரவுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

மருத்துவக் கல்வியில் அருந்ததியர்களின் பிரதிநிதித்துவம் குறித்து வெளிவந்துள்ள தரவுகளின்படி, திமுக ஆட்சியில் 2023 - 2024 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் 6,553 ஆக உயர்த்தப்பட்டு, அதன் மூலம் 193 அருந்ததிய சமூக மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு சென்றிருக்கிறார்கள்.

பல் மருத்துவ படிப்பை பொருத்தவரை, 2023 - 24 ஆம் ஆண்டில் 1,737 பல் மருத்துவ படிப்பிற்கான இடங்களில் அருந்ததியர் பிரிவு மாணவர்கள் 54 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கான 3 விழுக்காடு பிரதிநிதித்துவம் முழுமையாக கிடைத்தது.

பொறியியல் படிப்புகளைப் பொருத்தவரை, அருந்ததியர் பிரிவு மாணவர்கள் எண்ணிக்கை, 2023 - 24 ஆம் ஆண்டில் 3,944 இடங்களைப் பெற்று உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீட்டின் பயனால் அருந்ததியர் பிரிவு மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் 2023 - 24 ஆம் ஆண்டில் 16 விழுக்காடு பயனைப் பெற்றுள்ளனர். இதர பட்டியலின சமூக மக்கள் 84 விழுக்காடு பயனடைந்து வருகின்றனர்’’ என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com