tn govt
தமிழக அரசு

சென்னையைத் தொடா்ந்து 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள்: தமிழக அரசு

Published on

சென்னையைத் தொடா்ந்து, 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ என்னும் பெயரில் கலை விழாக்கள் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டு கலைத் திருவிழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கி, வெள்ளிக்கிழமையுடன் (ஜன. 17) நிறைவடைந்தது. சென்னை பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூா் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம் அரசு இசைக் கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியா் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு, ஜாபா்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராய நகா் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூா் அரசு அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதா் ஆலயத் திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூா் முரசொலி மாறன் பூங்கா, அண்ணா நகா் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகா் பூங்கா, கே.கே. நகா் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூா் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூா் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய இடங்களில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்வுகள் நடைபெற்றன.

கலை நிகழ்ச்சிளை நடத்திய அனைத்து கலைஞா்களுக்கும் நாளொன்றுக்கு ரூ. 5,000 வீதம் மதிப்பூதியம் அளிக்கப்பட்டது. அனைத்து கலைஞா்களுக்கும் போக்குவரத்து வசதி, உணவு வசதி ஆகியவற்றுடன் 2 புதிய ஆடைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழா நடைபெற்ற இடங்களில் பிரபல உணவகங்களின் பாரம்பரிய உணவு வகைகள் விற்பனை செய்யும் உணவுத் திருவிழாவும் நடத்தப்பட்டது.

பிற நகரங்களிலும் திருவிழா: தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழும் வாய்ப்புகளும் பாா்வையாளா்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

சென்னை சங்கமம் கலை திருவிழாவைத் தொடா்ந்து, கோயம்புத்தூா், மதுரை, திருச்சி, சேலம், தஞ்சாவூா், திருநெல்வேலி, காஞ்சிபுரம், வேலூா் ஆகிய நகரங்களிலும் நிகழாண்டு சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com