கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் எப்படி உருவாகவிருக்கிறது?

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு அடிக்கல்.
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.17.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றம் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொல்லியல் துறை சார்பில் இன்று காலை நடைபெற்ற விழாவில், அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கீழடி இணையதளத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொல்லியல் துறை சார்பில், 5914 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.17.10 கோடி மதிப்பீட்டில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படவிருக்கிறது. மற்றும் 2325 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ. 22.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவிருக்கிறது கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம்.

கீழடியில், தொல்லியல் துறையினர் பல கட்டங்களாக நடத்திய அகழாய்வில், நகர நாகரிகம் இருந்ததற்கான செங்கல் கட்டுமானங்கள், வணிகம் நடந்ததற்கான சான்றுகள் தொழில்நுட்பம், எழுத்தறிவு, மேம்பட்ட சமூக வாழ்க்கை என அனைத்து தொல்பொருள்களும் சான்றாக அமைந்துள்ளன. இந்த தொல்லியல் சான்றுகள் 2600 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றை, திறந்தவெளி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை தமிழக அரசு அமைக்கவிருக்கிறது.

அடுத்து பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் அமையவிருக்கிறது. சோழப்பேரரசின் தொன்மைச் சிறப்புகளையும் கடல் கடந்த வணிகத் தொடர்புகளையும் காட்சிப்படுத்திட ஓர் அருங்காட்சியகம் என்ற வகையில் இது அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மாளிகைமேடு என்று அழைக்கப்படும் பகுதியில், தொல்லியல் துறையானது, அகழாய்வு செய்து, அரண்மனைப் பகுதி தடயங்களையும் ஏராளமான தொன்மையான பொருள்களையும் கண்டுபிடித்திருக்கிறது. இவற்றை காட்சிப்படுத்தும் வகையில் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் அமைக்கப்படவிருக்கிறது. இதன் மாதிரி விடியோவும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com