
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை நிரந்தரமாக ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கனிம வளத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை கிராம மக்கள் நேரில் சந்தித்து நேற்று (ஜன. 22) கோரிக்கை வைத்த நிலையில், இன்று டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுரங்கம் தோண்டும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.
அமைச்சரிடம் கோரிக்கை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் நேற்று (ஜன. 22 மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை தில்லியில் சந்தித்துப் பேசினர். அரிட்டாபட்டி மக்களுக்கு நாளை நல்ல செய்தி வரும் என அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட விடப்பட்டிருந்த ஏலத்தை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நிரந்தரமாக ரத்து செய்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் உடனான விரிவான ஆலோசனைக்குப் பிறகு பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தை பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் கைவிடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளதாகவும் கிஷன் ரெட்டி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதை அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளைப் பரிமாறியும் கொண்டாடி வருகின்றனர். கிராமக் கோயில் முன்பு கூடி குலவை இட்டு வழிபாடு செய்தனர்.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.