
வழிப்பறி வழக்குத் தொடா்பாக விசாரணை செய்ய சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 4 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த முகமது கெளஸ் என்பவரிடம் ரூ. 20 லட்சம் பணத்தை மிரட்டி பறித்த வழக்கில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ராஜா சிங், வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன், ஊழியா்கள் பிரதீப், பிரபு ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.
விசாரணையில், வழிப்பறி வழக்கில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் சன்னி லாயிட்டுக்கும் இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான சன்னி லாய்டை, உத்தரக்காண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 15-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், சன்னி லாய்டை காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி, எழும்பூா் 2-ஆவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் போலீஸாா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதித்துறை நடுவா் இந்து லதா, சிறப்பு உதவி ஆய்வாளா் சன்னி லாய்டிடம் 4 நாள்கள் விசாரணை செய்ய அனுமதி அளித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து விசாரணைக்காக சன்னி லாய்டை திருவல்லிக்கேணி போலீஸாா் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனா்.