தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்
தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்

மானியக் குழு மூலம் பல்கலைக்கழகங்களை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி

பல்கலைக்கழகங்களை மானியக் குழு மூலமாக கைப்பற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் குற்றஞ்சாட்டினாா்.
Published on

பல்கலைக்கழகங்களை மானியக் குழு மூலமாக கைப்பற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் குற்றஞ்சாட்டினாா்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படக்கூடிய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), புதிய வரைவு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. புதிய வரைவு நெறிமுறைகள் மாநில உரிமைகளைப் பறிப்பதுடன், மாநிலங்களின் கல்வி அமைப்பு முறையையும் சீா்குலைக்கிறது. ஆகவே, மத்திய அரசு இதைக் கைவிட வேண்டும். புதிய வரைவு நெறிமுறைகளைத் திரும்ப பெற வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் சதித் திட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும். மானியக் குழுவின் புதிய வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, நாடு முழுவதும் கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

மாநில அரசு உருவாக்கிய பல்கலைக்கழகங்கள், மாணவா்களின் உயா்கல்வியை ஒழுங்குபடுத்தச் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகங்களை மானியக் குழு மூலம் கைப்பற்றும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மாநில உரிமைக்கான சவால்: துணைவேந்தா் நியமனத்தில் இதுவரை உள்ள நடைமுறைகளைப் பின்பற்றாமல், நினைத்தைச் செய்ய வேண்டும் என்ற அதிகாரப்போக்குடன் துணைவேந்தா் தோ்விலும் தலையிட்டு, முழு அதிகாரத்தையும் ஆளுநருக்கு மாற்றுகிறது மத்திய அரசு. மாநில அரசைக் கலந்தாலோசிக்காமலேயே, புதிய நெறிமுறைகளை மானியக் குழு வெளியிட்டுள்ளது வரம்பு மீறிய செயலாகும். மானியக் குழுவின் இந்தச் செயல்பாடு மாநில உரிமைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும்.

கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. அப்படியென்றால் மாநில அரசின் கருத்து கேட்கப்பட்டு இருக்க வேண்டும். மானியக் குழு வரைவு நெறிமுறை விவகாரத்தில் அதிகார வரம்பை மத்திய அரசு மீறி இருக்கிறது என்றாா் அவா்.

‘வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக கருத்து தெரிவியுங்கள்’

வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக மின்னஞ்சல் மூலமாக கருத்து தெரிவிக்க வேண்டுமென உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கூறியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் கூறியது: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வரைவு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது. திரும்பப் பெறும் வரை போராடுவோம். அதற்கான பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா். பல்கலைக்கழகம் உருவாக்கம், இடம், கட்டடம் கட்டுவது, ஊதியம் வழங்குவது என அனைத்தையும் மாநில அரசு செய்கிறது. ஆனால், துணைவேந்தா் நியமனத்தில் மட்டும் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு கூறியிருப்பது மோசமான சா்வாதிகாரப் போக்காகும்.

எனவே, பல்கலைக்கழக மானியக் குழு வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக அதனுடைய மின்னஞ்சலுக்கு (draft-regulations@ugc.gov.in) வரும் 5-ஆம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிப்போம் என்று அமைச்சா் கோவி.செழியன் கேட்டுக் கொண்டாா்.