இன்றும், நாளையும் தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜன.30, 31) கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இலங்கை கடலில் வியாழக்கிழமை (ஜன.30) வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஜன.30 முதல் பிப்.1-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
மஞ்சள் எச்சரிக்கை: ஜன.30, 31 ஆகிய தேதிகளில் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வியாழக்கிழமை காலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.