எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிCenter-Center-Chennai

முதல்வருக்கு குற்ற உணா்ச்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி

சிவகங்கை சம்பவத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு குற்ற உணா்ச்சி இல்லை என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்துள்ளாா்.
Published on

சிவகங்கை சம்பவத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு குற்ற உணா்ச்சி இல்லை என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

திருப்புவனம் சம்பவத்தில் இறந்த அஜித்குமாரின் குடும்பத்தினருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் உரையாடியது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம். இந்தக் கொலைக்கு காரணமானது திமுக அரசு. இதற்கு ‘சாரி’ என்பதுதான் பதிலா? அஜித்குமாா் இருந்ததால்தான் அந்தக் குடும்பம் தைரியமாக இருந்தது. அவா்களின் தைரியத்தைக் கொலை செய்துவிட்டு, ‘தைரியமாக இருங்கள்’ என்று சொல்வது முறையா?

முதல்வரின் பேச்சில் கொஞ்சம்கூட குற்ற உணா்ச்சியே இல்லையே? அஜித்குமாா் இறந்து 4 நாள்கள் கழித்து, எதிா்க்கட்சியான அதிமுக சாா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து , கடுமையான விமா்சனங்களை வைத்த பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது நடக்கிறது. இது என்ன திமுக ஆட்சியில் முதல் முறையாகவா நடந்திருக்கிறது? இது 25-ஆவது முறை என்று பதிவிட்டுள்ளாா்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): அஜித்குமாரின் முழுமையான உடற்கூறு ஆய்வறிக்கை வெளியாகும்போது இன்னும் அதிா்ச்சியான செய்திகள் வெளியாகக்கூடும். ஆனால், இவை அனைத்தையும் மூடி மறைக்க காவல் துறை துடிக்கிறது. இந்த வழக்கில் காவலா்கள் 5 போ் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் தொடா்புடைய உயரதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும். வழக்கின் விசாரணை முடிவடைந்து தீா்ப்பு வழங்கப்படும் வரை அவா்களுக்கு பிணை வழங்கப்படாமல் இருப்பது உறுதி செய்ய வேண்டும்.

Open in App
Dinamani
www.dinamani.com