அஜித்குமார் கொலை வழக்கு: மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கும்!

முதல்கட்ட அறிக்கையை ஜூலை 8-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வுகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சிவகங்கையில் காவல் துறையினர் தாக்கியதில் மரணமடைந்த அஜித்குமாரின் கொலை வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற, கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல் துறையினர் தாக்கப்பட்டு பலியானதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் காவல் துறையினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், மரியா கிளீட் ஆகியோர் அமர்வு முன்பாக இன்று(ஜூலை 1) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் தமிழக காவல்துறையிடம் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.

திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார், புலனாய்வு செய்யத்தானே காவல் துறை இருக்கிறது அடிப்பதற்காகவா காவல்துறை இருக்கிறது? என நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

தொடர்ந்து இன்று பிற்பகல் நடைபெற்ற விசாரணையில், அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கையை மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் நேரில் ஆஜராகி தாக்கல் செய்தார். அதேபோல மடப்புரம் கோயில் சிசிடிவி காட்சிகளை உதவி ஆணையர் தாக்கல் செயதார்.

இதனைப் பார்த்த நீதிபதிகள், "பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது. அஜித் குமாரின் உடலில் 44 காயங்கள் உள்ளன. அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது அறிக்கையில் தெரிகிறது. உடலின் ஒரு பாகம் விடாமல் தாக்கப்பட்டுள்ளார். இது சாதாரண கொலை வழக்கு இல்லை. மரக்கட்டை, இரும்பு கொண்டு தாக்கப்பட்டுள்ளார். காதில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்துள்ளனர்.

அரசு தனது குடிமகனையே கொலை செய்துள்ளது. யார் சொல்லி இப்படி செய்தீர்கள்? இவர்களை எல்லாம் இயக்கியது யார்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவில், “அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நான்காவது கூடுதல் மாவட்ட நீதிபதி(மதுரை) எஸ். ஜான் சுந்தர்லால் சுரேஷிடன் ஒப்படைக்க வேண்டும். இவ்வழக்கின் முழுமையான விசாரணையை அவர் தொடங்க வேண்டும். முதல்கட்ட அறிக்கையை வரும் 8 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

அஜித்குமார் கொலை வழக்கை, இனி மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கும். வழக்கு தொடர்பான அனைத்து சிசிடிவி காட்சிகளையும் பாதுகாக்க வேண்டும், எந்த மாற்றமும் செய்யக் கூடாது. இவ்வழக்கை நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்வார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Madurai bench of the Madras High Court has announced that the Madurai District Court will investigate the murder case of Ajith Kumar, who died in a police attack in Sivaganga.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com