விசாரணை என்ற பெயரில் கொலை! அடிப்பதற்காகவா காவல்துறை? - நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி

சிவகங்கை இளைஞர் மரண வழக்கின் நீதிமன்ற விசாரணை பற்றி...
Madurai High Court Order
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
Published on
Updated on
1 min read

திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என சிவகங்கை இளைஞர் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்தது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், மரியா கிளீட் ஆகியோர் அமர்வு முன்பாக இன்று(ஜூலை 1) விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் மனுதாரர் தரப்பில், "இந்த வழக்கை காவல் துறை உரிய முறையில் விசாரிக்கவில்லை, அஜித் குமார் மரணமடைந்த பின்னரே நகை காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த தலைமைக் காவலர் கண்ணன், மானாமதுரை டிஎஸ்பி சிறப்புப் பிரிவைச் சேர்ந்தவர். இவர் அங்கிருந்து திருப்புவனம் வந்து விசாரித்தது விதி மீறுவதாகவே பார்க்கப்பட வேண்டும்" என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அப்போது நீதிபதிகள், தமிழக காவல்துறையிடம் அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

"நகை காணாமல் போன வழக்கில் முதல் தகவல் அறிக்கை ஏன் உடனே பதிவு செய்யப்படவில்லை? யாருடைய உத்தரவின் பேரில் விசாரணை, சிறப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது? யார் சொல்லி இந்த வழக்கை கையில் எடுத்தார்கள்? சிறப்புப் படையினர் தாங்களாகவே வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளதா? உடனடியாக எஸ்.பி.யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது ஏன்? புலனாய்வு செய்யத்தானே காவல் துறை இருக்கிறது அடிப்பதற்காகவா காவல்துறை இருக்கிறது?" என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார், நீதித்துறை நடுவர் உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உண்மையை யாரும் மறைக்கக் கூடாது என்றும் கூறினர்.

இதனிடையே அஜித்குமாரை போலீசார் அடித்த விடியோ ஒன்றை அவரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இதில் கோயிலின் பின்புறத்தில் வைத்து அஜித் குமாரை காவல்துறையினர் அடித்தது தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The Madurai branch of the High Court has rised questions to police for Sivagangai lock up death case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com