கள்ளக்குறிச்சி அருகே முதிய தம்பதியை மிரட்டி 170 பவுன் நகைகள் கொள்ளை!

கள்ளக்குறிச்சி அருகே முதிய தம்பதியை மிரட்டி 170 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்
theft photo
கொள்ளைச் சம்பவம்TNIE
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கடுவனூர் கிராமத்தில் மூதாட்டி தம்பதிகள் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து முகமூடி அணிந்து வந்த நான்கு பேர் கம்பியை காண்பித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி பீரோவில் இருந்த சுமார் 200 பவுன் தங்க நகைகளை வியாழக்கிழமை காலை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது கடுவனூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனியன் (80) - பொன்னம்மாள் (65) தம்பதி. முனியன் கள்ளக்குறிச்சி 1 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

தம்பதிகளுக்கு கேசரி வர்மன், சதீஷ் என்ற இரு மகன்கள் உள்ளர். கேசரிவர்மன் துபையில் வசித்து வருகின்றார். சதீஷ் சென்னையில் பணிபுரிந்து வருகின்றார். கேசரி வர்மன் அவரது மகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக துபையில் இருந்து சில நாட்கள் முன்பாக அவரது சொந்த ஊரான கடுவனூர் கிராமத்திற்கு வந்துள்ளார். வங்கியில் இருந்த நகைகளை வீட்டில் உள்ள இரும்பு பீரோவில் வைத்து விட்டு சென்னையில் உள்ள உறவினர்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ் வழங்க சென்றுள்ளனர்.

வியாழக்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் வீட்டின் பின் பக்க கதவினை உடைத்துக் கொண்டு 4 பேர் முகமூடி அணிந்து வந்துள்ளனர். அதில் ஒருவர் யாராவது வீட்டிற்கு வருகின்றனரா என்பதை நோட்டமிட்டு வந்தார். மற்றொருவர் மூதாட்டி தம்பதிகளின் அருகே நின்று கொண்டு சப்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளார். மற்ற இருவர் இரும்பு பீரோவின் கதவுகளை கடப்பாரையால் நெம்பி உடைத்து அதிலிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனராம்.

இது குறித்து முதியவர் செல்லிடைபேசி மூலம் அவரது மகன் கேசரி வர்மனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவர் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, திருக்கோவிலூர் காவல் துணைக் கண்தாணிப்பாளர் பார்தீபன், சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் மற்றும் போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

பின்னர் தடயவியல் நிபுணர் தடயங்களை சேகரித்தார். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் கொள்ளையடித்துச் சென்ற வீட்டில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாக்கம் எனும் கிராமத்திற்கு சென்றது. அக் கிராமத்தில் ராமலிங்கம் என்பவரது வீட்டில் நின்று விட்டது.

பின்னர்தான், அவர் வீட்டிலும் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது என்றும், ராமலிங்கம் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் வந்த உடன் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர் என்றும் தெரிய வந்துள்ளது, தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீஸார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com