
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, வரும் பொங்கல் பண்டிகை முதல் மதுரை தோப்பூர் வளாகத்திலேயே செயல்படும் என்று அதன் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயில சேர்க்கை பெற்ற மருத்துவ மாணவர்களுக்கு, தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதுரை தோப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுரை எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் திருநாள் முதல், மதுரை தோப்பூர் எய்ம்ஸ் வளாகத்திலேயே மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தோப்பூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், தென்காசி எம்.பி. ராணி திருகுமார், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற மாணவ, மாணவிகள், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார்கள். அவர்களுக்கு போதிய இட வசதி இல்லாததால், வாடகைக் கட்டடங்களும் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்றைய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அனுமந்தராவ் பேசுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. எனவே, வரும் ஜனவரி மாதம் பொங்கல் திருநாள் முதல், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, இந்த புதிய கட்டடத்தில் செயல்படத் தொடங்கும். இந்த ஆறு மாத காலத்துக்குள், வகுப்புகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும், மருத்துவர்கள் சிகிச்சையளிக்க 120 படுக்கை வசதிகொண்ட மருத்துவமனை வளாகமும் முடிக்கப்படும். தேவையான உபகரணங்கள் வாங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 2027ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என்றும், மருத்துவமனைக் கட்டுமானப் பணியை எடுத்திருக்கும் ஒப்பந்த நிறுவனத்திடம், ஒவ்வொரு மாதமும், கட்டுமானப் பணியின் நிலை குறித்து அறிக்கை அளிக்குமாறு கோரியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.