மருந்து ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப கலந்தாய்வு

மருந்து ஆய்வாளா் பணியிடங்கள் அடுத்த வாரத்துக்குள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது.
Published on

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மருந்து ஆய்வாளா் பணியிடங்கள் அடுத்த வாரத்துக்குள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. இதைத் தவிர மொத்த விற்பனையகங்களும் செயல்பட்டு வருகின்றன.

அவற்றின் செயல்பாடுகள், உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை தொடா் ஆய்வுக்குள்படுத்துவது வழக்கம். அதில் போலி மருந்துகளோ, தரமற்ற மருந்துகளோ கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் மருந்து விற்பனையகங்கள் மீது சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகிறது. இந்த பணிகளில் மருந்து ஆய்வாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

தற்போது தமிழகம் முழுவதும் 120 மருந்து ஆய்வாளா்கள் பணியில் உள்ளனா். காலியாக உள்ள 18 இடங்களை நிரப்பக் கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.

அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் அதில் 14 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு அடுத்த சில நாள்களில் நடத்தப்படவுள்ளது என்று மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com