
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில், பணியில் இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மாவை, காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், இன்று காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். இந்த ரயில்வே கேட் பகுதியில் கீப்பராக பணியில் இருந்தவர் தமிழ் தெரியாத வடமாநில இளைஞர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
கேட் கீப்பராக இருந்த பங்கஜ் சர்மா, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே வாரியத்தின் குரூப் டி தேர்வில் தேர்ச்சி பெற்று ரயில்வே கேட் கீப்பர் பணியில் சேர்ந்துள்ளார்.
தமிழகத்தில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில், இதுபோன்ற தமிழ் தெரியாத, வட மாநில நபர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. தமிழகத்தில் கேட் கீப்பர் பணிக்குத் தகுதியான ஒரு இளைஞர் கூட இல்லையா என்றும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
ஏற்கனவே, விபத்து நடந்த இடத்தில், கேட் திறந்திருந்ததா? இல்லை மூடியிருந்த கேட்டை திறக்க வைத்தார்களா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அஜாக்ரதையால்தான் இந்த சம்பவம் நடந்ததாகக் கருதிய மக்கள் பங்கஜ் சர்மாவை சரமாரியதாகத் தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில், காவல்துறையினர் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். ரயில்வே மேலாளர், பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே, ரயில்வே கேட் பகுதியில், பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் மோதிய விபத்தில், திராவிட மணி என்பவரின் மகள் சாருமதி (16), விஜயசந்திரகுமார் என்பவரின் மகன் விமலேஷ் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், பள்ளி வேனில் இருந்த ஓட்டுநர் சங்கர் (47) ற்றும் மூன்று மாணவர்கள் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதில், சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த செழியன் (15) சிகிச்சை பலனின்றி பலியானதாகக் கூறப்படுகிறது.
இதில், சம்பவ இடத்தில் பலியான சாருமதியும், மருத்துவமனையில் பலியான செழியனும் அக்கா, தம்பி என்று தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையும், ரயில்வே தரப்பில் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. சொல்லப் போனால்... என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.