போதைப் பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது தொடர்பாக....
Actor srikanth, krishna
நடிகர் ஸ்ரீகாந்த் | நடிகர் கிருஷ்ணாபடம் | எக்ஸ்
Published on
Updated on
1 min read

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் வழக்கில், ஜூன் 23-ஆம் தேதி நடிகா் ஸ்ரீகாந்த், 26-ஆம் தேதி நடிகா் கிருஷ்ணா ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்களை சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள், நீதிபதி நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீகாந்த் தரப்பில், இந்த வழக்கில் முதல் எதிரியான பிரவீன் குமாா் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதாகவும், ஸ்ரீகாந்திடம் இருந்து போதைப் பொருள் ஏதும் கைப்பற்றப்படவில்லை எனவும் வாதிடப்பட்டது.

நடிகா் கிருஷ்ணா தரப்பில், அவரைக் கைது செய்ததற்கான காரணங்கள் ஏதும் தெரிவிக்காமல் காவல் துறை கைது செய்ததாகவும், அவரிடம் நடத்திய மருத்துவப் பரிசோதனையில், போதைப் பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை எனவும் வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில், பிரசாத் என்பவரிடம் நடத்திய விசாரணையில் போதைப் பொருள் புழக்கம் குறித்து தெரியவந்ததாகவும், அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரவீன்குமாரும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிா்மல்குமாா், நடிகா் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

இருவரும் தலா ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபா் ஜாமீனும் செலுத்த வேண்டும் எனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இருவரும் தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

Summary

The Madras High Court has granted conditional bail to actors Srikanth and Krishna, who were arrested in a drug case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com