
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஓமந்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அரசியல் ரீதியாக மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இருவரும் நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது, பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் (ஜூலை 8) ஆம் தேதி ஒமந்தூரிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொண்டு வந்தனர்.
மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை முதலே வரத் தொடங்கிய செயற்குழு உறுப்பினர்கள் வரத் தொடங்கினர்.
இதற்காக மண்டப வாயிலில் செயற்குழு உறுப்பினர் விவரங்கள் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் கூட்ட அரங்கத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் இதைத் தொடர்ந்து முற்பகல் 11.20 மணிக்கு கூட்ட அரங்குக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வந்தார். அவரை செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது.
இந்த செயற்குழுக் கூட்டத்தில் கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச் செயலர் முரளிசங்கர், இணைப் பொதுச் செயலரும், எம்எல்ஏவுமான அருள், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பாமக முன்னாள் மாநிலத் தலைவர் தீரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர்.
மாநில மகளிர் சங்கச் செயலர் சுஜாதா செயற்குழுக் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசுகையில், “மருத்துவர் ராமதாஸால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம்தான் இன்று பாட்டாளி மக்கள் கட்சியாக மாறி, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் மாநாட்டுக்குப் பின்னர் சிலர் முகநூலில் கம்பு சுற்றி வருகின்றனர்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.