
தமிழ்நாடு ஒருபோதும் தலைவணங்காது என தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தற்போது மத்திய பாஜக அரசின் தொகுதி மறுசீரமைப்பினால் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தென் மாநில முதல்வர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் உலக மக்கள்தொகை நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"உலக மக்கள்தொகை நாளில் மத்திய அரசுக்கு ஒன்றை நினைவூட்டுகிறேன்.
-> மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
-> பெண்களுக்கு கண்ணியத்துடன் அதிகாரம் அளிக்கிறது.
-> அனைவருக்கும் சுகாதாரம், கல்வியை அளிக்கிறது.
-> நிலையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
ஆனால் நமக்கு கிடைப்பது என்ன?
குறைவான இடங்கள், குறைவான நிதி, நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படும் குரல். (தொகுதி மறுசீரமைப்பினால் தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவது)
ஏன்? ஏனென்றால் தமிழ்நாடு சரியானவற்றைச் செய்தது. ஆனால் அது தில்லியை அச்சுறுத்துகிறது.
அதைவிட இன்னும் மோசம் என்னவென்றால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அவரது கட்சியும் இப்போது தமிழ்நாட்டுடன் அல்ல, தில்லியுடன் நிற்கிறார்கள். நமது முன்னேற்றத்தைத் தடுக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு ஆதரவைத் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், நான் தெளிவாக ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு தலைவணங்காது.
நாம் ஒன்றாக இணைந்து எழுவோம். இது ஓரணி vs தில்லி அணி.
நம்முடைய மண், மொழி, மானத்தைக் காக்க 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் இணையுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.