
அரக்கோணம் அருகே ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் மேட்டு குன்னத்தூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே உள்ள கிராமம் மேட்டு குன்னத்தூர். இந்த ஊரைச் சேர்ந்த சரவணன் மகன் புவனேஸ்வரன் (7), அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இதே ஊரைச் சேர்ந்த கோபியின் மகன் மோனி பிரசாத்(9), அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இவரது தம்பி புஜன் (7) அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மூன்று சிறுவர்களும் குன்னத்தூர் ஏரியில் விளையாடச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.
நீரில் மூழ்கிய சிறுவர்களை கிராமத்தினர் மீட்டு பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இச்சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூவருமே இறந்து விட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
மூன்று பேரின் சடலங்களும் உடற்கூறு பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் பலியான நிலையில், குறிப்பாக ஒரே குடும்பத்தில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: டேங்கர் ரயில் தீவிபத்து! முழுவதுமாக அணைக்கப்பட்டது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.