இன்று குடமுழுக்கு: விழாக்கோலம் பூண்டது திருப்பரங்குன்றம்!

சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெறுவதையொட்டி விழாக்கோலம் பூண்டது திருப்பரங்குன்றம் .
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்
Published on
Updated on
2 min read

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை அதிகாலை 5.25 முதல் காலை 6.10 மணிக்குள் நடைபெறுவதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால், திருப்பரங்குன்றம் ஞாயிற்றுக்கிழமை விழாக்கோலம் பூண்டது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், விஷேச சாந்தி நடைபெற்று 6}ஆம் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹுதி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு 7 }ஆம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.

இரவு மூலவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை, பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு காப்புக் கட்டப்பட்டது. தொடர்ந்து, தர்ப்பைக் கயிறு, பட்டு நூல் கொண்டு (ஸ்பாரிசாகுதி) சுவாமிக்கு சக்தி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடமுழுக்கையொட்டி, திருப்பரங்குன்றத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

அதிகாலை 5.25 முதல் 6.10 மணிக்குள் குடமுழுக்கு: குடமுழுக்கை முன்னிட்டு, திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மங்கள வாத்தியம், 3.45 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், எட்டாம் கால யாகசாலை பூஜை நடைபெறும்.

முன்னதாக, அதிகாலை 5 மணிக்கு தங்கக் குடத்தில் பிரதான கலசம் யாகசாலையிலிருந்து புறப்பாடாகிறது. கோயில் ராஜகோபுரத்தின் ஏழு கலசங்கள், கோவர்தனாம்பிகை அம்மன் விமானம், வல்லப கணபதி விமானம், பசுபதீஸ்வரர் கோயில் விமானம் ஆகியவற்றில் சிவாசாரியர்கள் சிறப்பு பூஜை செய்த பிறகு, ஒரே நேரத்தில் அதிகாலை 5.10 முதல் காலை 6.10}க்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது.

இதையடுத்து, திங்கள்கிழமை காலை 6 மணிக்கு தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி, பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு, மகா தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு மஹா அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று, இரவு 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்திலும், கோவர்தனாம்பிகை அம்மன் ரிஷப வாகனத்திலும் வீதி உலாவுக்கு எழுந்தருளுகின்றனர்.

மதுரையிலிருந்து மீனாட்சி, சுந்தரேசுவரர் வருகை: குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் ஞாயிற்றுக்கிழமை இரவு திருப்பரங்குன்றம் கோயிலை வந்தடைந்தனர். அப்போது, சுவாமிகளுக்கு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை முதல் இரவு வரை தரிசனத்துக்கு ஏற்பாடு: கோயிலில் வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பிற்பகல் ஒரு மணிக்கு நடை அடைத்து, மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணி வரை திறந்திருக்கும். குடமுழுக்கையொட்டி, திங்கள்கிழமை காலை 7 மணி முதல் இரவு வரை தொடர்ந்து கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநகராட்சி சார்பில், 10 இடங்களில் முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டு, நடமாடும் கழிப்பறை, குடிநீர் வாகனங்கள், நடமாடும் மருத்துவமனைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பிரசாதப் பை: குடமுழுக்கு விழாவுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி சார்பில், மூலவர் சுப்பிரமணிய சுவாமி படம், மஞ்சள் கயிறு, குங்குமம், இனிப்பு கொண்ட பிரசாதப் பை வழங்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com