
ஒரு பாட்டில் விஷம் கொடுத்தால் செத்துப்போயிருப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்குக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா எதிர்வினையாற்றி முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ - துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வைகோ முன்னிலையில் இருவரும் சமாதானம் ஆகினர்.
இதனிடையே, அண்மையில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் மல்லை சத்யாவை குற்றஞ்சாட்டி வைகோ பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது வைகோ பேசுகையில், “மல்லை சத்யாவை என் உடன்பிறவா தம்பி போல பாா்த்து வந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இயக்கத்துக்கு மாறாக மல்லை சத்யா செயல்பட்டு வருகிறார். என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் மோசமான வகையில் பதிவிடும் நபர்களுடன் மல்லை சத்யா மிக நெருக்கமாகப் பழகி வருகிறார்” என்று குறிப்பிட்டுப் பேசினார்.
இந்த நிலையில், வைகோவுக்கு பதில் அளிக்கும் விதமாக மல்லை சத்யா தனது முகநூல் பக்கத்தில் எதிர்வினையாற்றிப் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்தப் பதிவில், “மெளனம் கலைக்கின்றேன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இதுநாள் வரை இருந்து வந்துள்ளேன், ஆனால் கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு நிச்சயமாக நான் காரணம் இல்லை.
துரோகம்
கடந்த 9.06.25 புதன்கிழமை வைகோ, ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தமிழீழத் தாயகத்தின் ஒப்பற்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் புலிப் டை வீரன் மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று எனக்கு (வைகோ) மல்லை சத்யா துரோகம் செய்து விட்டார் என்று ஒப்பிட்டுப் பேசினார்.
சான்றோர் பெருமக்களே, நான் மாத்தையா போன்று துரோகியா? நீதி சொல்லுங்கள்.
என் அரசியல் பொதுவாழ்க்கையில் வைகோவுக்கு எதிராக நான் சிந்தித்தேன், செயல்பட்டேன் என்பது உண்மையானால் பெரும்புலவர் இளங்கோ அடிகளின் தமிழர்களின் பெருங்காப்பியம் சிலப்பதிகாரத்தின் மூதுரையான, அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றுவனாகட்டும் என்ற நீதி நின்று நிலைத்து என்னை இப்போதே சுட்டெரிக்கட்டும்.
இறந்துபோயிருப்பேன்
வைகோ, தன் மகன் துரையின் அரசியலுக்காக, 32 ஆண்டுகள் வெளிப்படைத் தன்மையோடு உண்மையாகவும் விசுவாசமாகவும் குடும்பத்தை மறந்து, என் வாழ்க்கையின் 32 ஆண்டுகால வசந்தத்தைத் தொலைத்து இரவு பகல் பாராமல் கட்சி கட்சித் தலைவர் வைகோ என்று பணியாற்றி வந்த என் மீது அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப்பட்ட கடந்த 9 ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) இரவு வரை ஐந்து இரவுகளும் என்னால் தூங்க முடியவில்லை. என் தூக்கத்தைத் தொலைத்து விட்டேன், என் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு, உயர்ந்த உலகம் போற்றும் மாமனிதர் தலைவர் வைகோ வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி இருக்கலாமே.
அல்லது ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் கொடுத்து குடிக்கச் சொல்லி இருந்தால் குடித்து செத்துப்போயிருப்பேனே, வைகோ அவர்களே, அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்குத் துரோகம் என்ற சொல்லா தங்களுக்குக் கிடைத்தது? வேதனையில் துடிக்கின்றேன் நான்.
வைகோ அவர்களே, உங்கள் தாழ்பணிந்து மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன். இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்தத் தொண்டன் மீதும் இதைப் போன்ற அபாண்டமான பழியைச் சுமத்திப் பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்திருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல.
நீ பேசாத வார்த்தைக்கு நீ எஜமான், நீ பேசிய வார்த்தைக்கு நீ அடிமை. என் மெளனத்தைக் கலைக்கின்றேன்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் ஆறுதல் கூறிய சான்றோர் பெருமக்களுக்கும் என் தரப்பு நியாயத்தை, கற்றறிந்த வழக்குரைஞரைப் போன்று அழுத்தமான வாதங்களை ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்குப் புரியவைத்த தமிழகத்தின் தலைசிறந்த அரசியல் விமர்சகர்கள், அரசியல் ஆளுமைகளுக்கும் அன்பு நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் என் நெஞ்சின் அடியாழத்தில் இருந்து நன்றி கூறுகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: இபிஎஸ் திட்டவட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.