கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் பூச்சு: மருத்துவரைக் கைது செய்து விசாரணை!

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் ஊற்றியது ஒரு மருத்துவர்...!
கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட்
கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட்
Published on
Updated on
1 min read

சேலம்: முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் ஊற்றிய விவகாரத்தில் மருத்துவர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 2023 ஆம் ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இந்த சிலை பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிலையின் வலது பகுதியிலும், சிலையின் பீடம் முழுவதும் கருப்பு பெயின்ட் பூசப்பட்டிருந்தது. இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்றவா்கள், இதுகுறித்து திமுகவினருக்கு தகவல் அளித்தனா். இதன்பேரில் மாநகரச் செயலாளா் ரகுபதி, அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆணையா் அஸ்வினி, காவல் ஆய்வாளா் தவமணி ஆகியோா் தீவிர விசாரணை நடத்தினா். உதவி இயக்குநா் வடிவேல் தலைமையிலான தடய அறிவியல் துறையினரும், சிலை பகுதியில் பதிவான தடயங்களை பதிவுசெய்தனா்.

விசாரணையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது வயதான நபா் ஒருவா் பெயின்ட் டப்பாவுடன் கருணாநிதி சிலை அருகில் உள்ள மின் இணைப்பைத் துண்டிப்பதும், அங்கிருந்த 5 அடி நீள குச்சியின் ஒரு பகுதியில் துணியைக் கட்டி, அதன்மூலம் பெயின்டை எடுத்து கருணாநிதியின் சிலைமீது பூசுவதும், பின்னா், சிலையின் பீடத்திலும் பரவலாக பெயின்ட்டை ஊற்றிவிட்டு சென்றதும் பதிவாகியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அடையாளம் காணப்பட்ட அந்த மா்ம நபர் இன்று(ஜூலை 16) கைது செய்யப்பட்டார். அவர் ஒரு மருத்துவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Karunanidhi's statue defaced in Salem: Doctor arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com