“காமராசர் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன்” - திருச்சி சிவா

“நான் கூறிய செய்தியினை விவாதப் பொருளாக்கிட வேண்டாம்” - திருச்சி சிவா விளக்கம்
திருச்சி சிவா
திருச்சி சிவா
Published on
Updated on
1 min read

பெருந்தலைவர் காமராசரைப் ப்ற்ரி திமுக எம்.பி. திருச்சி சிவா பேசிய கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தநிலையில், இதற்கு விளக்கமளித்து தன் நிலையை தெளிவுபடுத்தியிருக்கிறார் திருச்சி சிவா.

திருச்சி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பெருந்தலைவர் காமராசரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாகக் கருத்து கொண்டு விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன. நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதுகூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள். கல்விக்கண் திறந்த காமராசர் என்றும், மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக ஏழை வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் வருவதற்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்பதையும் பல மேடைகளில் உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் நான் பேசுவது வழக்கம்.

குணாளா! மணாளா! குலக்கொழுந்தே! குடியாத்தம் சென்று வா! வென்று வா!” என்று எழுதிய பேரறிஞர் அண்ணா - காமராசரின் மறைவுக்குப் பின் அவருக்கு அனைத்து மரியாதைகளும் செய்ததோடு, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு அவர் திருப்பெயரைச் சூட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியொற்றி, அவர் பிறந்தநாளை ’கல்வி வளர்ச்சி நாளாக’ கடைப்பிடித்து அவரின் புகழுக்கு நாளும் மெருகேற்றும் இன்றைய கழகத் தலைவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் பணியாற்றும் நான், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல.

நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறையேகி, தியாகத் தழும்பேறி, முதலமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான். அண்ணா, கலைஞர், தளபதி வழியில் - கண்ணியம் காக்கும் கடமை கொண்ட கழகத் தொண்டன்! இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.

Summary

Trichy Siva: has great respect and admiration for Kamaraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com