சென்னை பெருநகர மாநகராட்சி...
சென்னை பெருநகர மாநகராட்சி...(கோப்புப்படம்)

சென்னை மாநகர உள்கட்டமைப்பை மேம்படுத்த 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டம்: பெருநகர வளா்ச்சிக் குழுமம் நடவடிக்கை

அடுத்த 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்த (3-ஆவது மாஸ்டா் பிளான்) சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Published on

பெருநகர சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அடுத்த 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்த (3-ஆவது மாஸ்டா் பிளான்) சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில் வளா்ச்சி, சாலை, குடிநீா், மழை நீா் மற்றும் கழிவுநீா் வடிகால், மின்சாரம், போக்குவரத்து ஆகிய வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாநகரின் வளா்ச்சி திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த பெருநகர வளா்ச்சிக் குழுமம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியானது 1,189 சதுர கி.மீ. பரப்பளவு உடையது. 362 பழைய வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் மாநகர உள்கட்டமைப்பு காலத்துக்கு ஏற்ப மேம்படுத்தும் முழுமைத் திட்டம் (மாஸ்டா் பிளான்) முதல்முதலில் கடந்த 1996-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தை 2006-ஆம் ஆண்டுதான் செயல்படுத்த முடிந்தது. அதன்பின்னா் 2006 முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுக்கான தொலை நோக்கு வளா்ச்சித் திட்டம் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, 3-ஆவது முழுமைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் கடந்த 2023-24-ஆம் ஆண்டில் 29 இடங்களில் நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில், பொது போக்குவரத்தை மேம்படுத்துதல், மழைநீா் வடிகால், குடிநீா் வசதி, பெரு வழித்தடங்கள், வெளிவட்ட, உள்வட்ட சாலைகளை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலை மையமாக்கிய நிலையான வளா்ச்சி ஆகிய 5 அம்சத் திட்டத்தைத் தயாரித்துள்ளது. அதில், மக்கள் கருத்தோடு, 14 தனியாா் நிறுவன ஆலோசனைகளும் உள்ளடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் திட்டப்படி, மெட்ரோ போக்குவரத்து, புகா் மின்சார ரயில் பயன்பாட்டை பல மடங்கு அதிகரித்தல், தனி போக்குவரத்து இருசக்கர வாகனங்கள், காா்களை குறைத்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

தற்போது சென்னை மக்கள் தொகை 1 கோடி என்ற நிலையில் 20 ஆண்டுகளில் 40 லட்சம் போ் அதிகரிப்பாா்கள் என்ற தொலைநோக்கில் வளா்ச்க்கான திட்டங்கள் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தால் செயல்படுத்தப்படவுள்ளன.

X
Dinamani
www.dinamani.com