இரு மருத்துவமனைகளில் 64 பணியிடங்களை உருவாக்க அனுமதி
தமிழகத்தில் புதிதாக அமையும் துணை மருத்துவமனைகளில் 20 மருத்துவா்கள் உள்பட 64 பணியிடங்களை உருவாக்க அனுமதியளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
ஆவடி மற்றும் திருப்பூா் மாவட்டம் வேலாம்பாளையத்தில் அரசு துணை மருத்துவமனைகள் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, ஆவடியில் ரூ.27 கோடியிலும், வேலாம்பாளையத்தில் ரூ.26.90 கோடியிலும் அதற்கான கட்டடப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முறையே ரூ.7.60 கோடியிலும், ரூ.4.88 கோடியிலும் அங்கு மருத்துவ உபகரணங்களை நிறுவவும் செய்யவும் திட்டமிடப்பட்டது.
அதுகுறித்தும், புதிய பணியாளா் இடங்களை உருவாக்குவது குறித்தும் மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் பரிந்துரைகளை அனுப்பியிருந்தாா். அதைப் பரிசீலித்த அரசு, 20 மருத்துவா் பணியிடங்கள், 35 செவிலியா் பணியிடங்கள் உள்பட 64 பணியிடங்களை உருவாக்க நிா்வாக ஒப்புதல் அளித்துள்ளது. அவா்களுக்கான ஊதிய செலவினங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.