2026 பேரவைத் தேர்தலிலும் இபிஎஸ் படுதோல்வி அடைவார்: அமைச்சர் கே.என்.நேரு

2026 பேரவைத் தேர்தலிலும் இபிஎஸ் படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
Minister K.N. Nehru
அமைச்சர் கே.என்.நேரு.
Published on
Updated on
2 min read

2026 பேரவைத் தேர்தலிலும் இபிஎஸ் படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பயணம் போய்க் கொண்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக் கூத்துகளை அரங்கேற்றி நெட்டிசன்களுக்கு ட்ரோல் மெட்டிரியல் ஆகிக் கொண்டிருக்கிறார்.

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பைத் தயவு செய்து மாற்றிவிடுங்கள் பழனிசாமி அவர்களே! பாஜக கூட்டணியை விட்டு விலகுவது போல 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, கூட்டணிக் கட்சிகளை அதிமுகவில் சேர்க்க முயன்றார் பழனிசாமி. ஆனால், அது கைகூடவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக திமுக கூட்டணிக் கட்சிகளை அழைத்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்சிகூட அதிமுக அணியில் சேரவில்லை. ’2026 தேர்தலில் பலமான கூட்டணியை அமைப்பேன்; வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது; தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்; பாஜக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி’ என்றெல்லாம் தொடர்ந்து பழனிசாமி உருட்டிக் கொண்டே இருந்தார். கூட்டணியை உருவாக்கக் கூடிய பழனிசாமியின் ஆளுமைதான் சரிந்து தொங்கியது!

ஆனால், அதிமுகவின் கூட்டணி கணக்கை தில்லியில் இருக்கும் பழனிசாமியின் முதலாளிகள் போட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து, கூட்டணியை அறிவித்து விட்டுப் போனார். ஆனால், கூட்டணிக்குத் தலைமை தாங்குவதாகத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி நாட்டாமை படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் காட்சியில் ஒருவர் மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் போல அமித்ஷா பக்கத்தில் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.

அதிமுக கூட்டணி அமைந்தாலும் அதனை ’அதிமுக கூட்டணி’ என்று அதிமுகவினரைத் தவிர மற்றவர்கள் யாருமே சொல்வதில்லை. அதிமுக, பாஜக, தமாகா தவிர அந்தக் கூட்டணியில் வேறு யாருமே இல்லாததால், ’மக்களை மறப்போம்; தமிழ்நாட்டை விற்போம்!’ பயணத்தில் கூட்டணிக்கு மீண்டும் ஆள் பிடிக்க இறங்கிவிட்டார் பழனிசாமி. ’பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப் போகிறது’ என்று ஆருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ரத்னக் கம்பளத்தைத் தூக்கிக் கொண்டு திரிகிறார்.

கோவை பயணத்தில், “கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்று முகவரி இல்லாமல் இருக்கிறது” என்று பேசியவர், சிதம்பரம் பயணத்தில், கூட்டணியில் சேர விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்கிறார். ‘எங்கள் கூட்டணியில் சேர்ந்தால் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்’ என்கிறார். ’கோவையில் பேசியவரும் சிதம்பரத்தில் பேசியவரும் ஒரே ஆளா?’ என்று வாக்காளர் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பழனிசாமி விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல. பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம் என்பதை திமுகவின் தோழமை கட்சிகளும் மக்களும் அறிவார்கள். அதனால்தான் பழனிசாமியின் அழைப்பைக் கம்யூனிஸ்ட்டுகளும் விடுதலைச் சிறுத்தைகளும் நிராகரித்திருக்கின்றன.

பாஜகவோடு அதிமுக கூட்டணி வைப்பதற்குச் சில நாட்கள் முன்பு கூட, ’திமுக கூட்டணியில் இருக்கிற கட்சிகள் எந்தக் காலத்திலும் வளராது’ என விரக்தியாக பழனிசாமி சாபம் இட்டார். அப்படிப் பேசிய நாக்குதான், பிறகு கூட்டணிக்காகக் கெஞ்சின. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளை ’தத்துவப் பச்சோந்திகள்’ என விமர்சித்தார் ஜெயலலிதா. அவருடைய வழியில் பழனிசாமி, ‘கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவிடம் பணம் வாங்கியபோதே அவர்களது கதை முடிந்துவிட்டது’’ என மோசமாகப் பேசுகிறார்.

இப்படி திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சிக்கும் பழனிசாமி, என்றைக்காவது பாஜகவை விமர்சித்திருக்கிறாரா? கூட்டணி ஆட்சி என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்லிக் கொண்டிருக்கும் அமித்ஷாவிற்கு பதிலடி தர முடியாத பழனிசாமி திமுக கூட்டணிக் கட்சிகளைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா?

’’அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டினால்தான் தமிழ்நாட்டு மக்களின் பிரச்னை தீரும். அதனால் நாங்கள் அவர் வீட்டின் கதவைத் தட்டினோம்” என்று சொல்கிறார் பழனிசாமி. அமித்ஷா வீட்டிற்குப் போவதாக இருந்தால் சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே! எதற்காக மக்கள் பிரச்னையை பேச கார்களில் மாறி மாறிப் போக வேண்டு? ’தில்லி அதிமுக அலுவலகத்தைப் பார்க்க வந்தேன்’ என ஏன் பொய் சொல்ல வேண்டும்?

இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் !

தோல்வி மேல் தோல்வியடைந்து வரும் பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் படுதோல்வி அடைவார் என்பது உறுதியானதால்தான் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி கூட்டணிக் கட்சிகளுக்கு ஆள் பிடிக்க பஸ்சில் பயணிக்கிறார். 2021 தேர்தலில் பழனிசாமியின் பச்சைப் பொய்களை நம்பாமல், புறந்தள்ளிய மக்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தலைப் போல 2026 தேர்தலிலும் பித்தலாட்ட பாஜக - அதிமுக கூட்டணியைப் புறக்கணித்து நம்பிக்கை நாயகனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் அரியணையில் ஏற்றுவார்கள். மக்களின் பேராதரவோடு திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Urban Development Minister K.N. Nehru has said that EPS will suffer a crushing defeat in the 2026 assembly elections as well.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com