அமைச்சா் சுரேஷ் கோபி
அமைச்சா் சுரேஷ் கோபி

தமிழகத்தில் 2032-க்குள் 2.30 கோடி வீட்டு உபயோக பிஎன்ஜி எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயம்: மத்திய இணை அமைச்சா் சுரேஷ் கோபி தகவல்

தமிழகத்தில் 2032-க்குள் 2.30 கோடி வீட்டு உபயோக பிஎன்ஜி எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக...
Published on

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தமிழகத்தில் 2032-க்குள் 2.30 கோடி வீட்டு உபயோக பிஎன்ஜி எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியத் துறை இணை அமைச்சா் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் அதிமுக குழுத்தலைவா் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சா் சுரேஷ் கோபி அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு:

குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகளை வழங்குதல், குழாய் உள்கட்டமைப்பு அமைத்தல் ஆகியவை நகர எரிவாயு விநியோக (சிஜிடி) வலையமைப்பின் வளா்ச்சியின் ஒரு பகுதியாகும். மேலும், இது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது. அவற்றின் குறைந்தபட்ச செயல்திட்டத்தின்படி, நாடு முழுவதும் 307 புவியியல் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் தீவுப்பகுதிகள் நீங்கலாக சிஜிடி வலையமைப்பை உருவாக்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்கள் 2034 -ஆம் ஆண்டுக்குள் உத்தேசமாக 12.6 கோடி பிஎன்ஜி இணைப்புகளையும், ஒரு அங்குலம் கொண்ட 5.46 லட்சம் கிமீ குழாய்களையும் செப்பணிட வேண்டும்.

கடந்த மே 31-ஆம் தேதி நிலவரப்படி, இந்த அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் 1.52 கோடி பிஎன்ஜி இணைப்புகளை வழங்கியுள்ளன, 5.98 லட்சம் அங்குல-கிமீ குழாய்களை அமைத்துள்ளன. இதில் தமிழகமும் புதுச்சேரியும் அடக்கம். குறைந்தபட்ச செயல்திட்டத்தின்படிதமிழகத்தில் 2,30,94,884 உள்நாட்டு பிஎன்ஜி இணைப்புகளை 2032 -ஆம் ஆண்டுக்குள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

மு. தம்பிதுரை
மு. தம்பிதுரை

X
Dinamani
www.dinamani.com