
இணையதளங்களில் பகிரப்படும் பெண்களின் அந்தரங்க விடியோ மற்றும் புகைப்படங்களை அகற்றுவது தொடா்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வருவதாக மத்திய அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், பெண் வழக்குரைஞா் ஒருவா் இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள தனது அந்தரங்க விடியோக்களை அகற்ற உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினம், பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மற்றும் புகைப்படங்கள் 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது 6 தளங்களில் இருந்து மட்டும் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. எனவே, அவற்றையும் அகற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டாா்.
அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான, மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்குகள் மட்டுமன்றி, பெண்களுக்கு எதிரான அனைத்து பாலியல் துன்புறுத்தல் வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவா்களின் அடையாளங்களை மறைத்து, வழக்கு ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயா் உள்ளிட்ட விவரங்கள் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட வழக்கு ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தாா்.
அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் குமரகுரு, இணைய குற்றத் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள் நேரடியாக தங்களின் விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றுவது தொடா்பாக சம்பந்தப்பட்ட துறையை எளிதில் அணுகும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருகிறது என்று தெரிவித்தாா்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இதுதொடா்பான மத்திய அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆக.5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.