
மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பதற்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வியாழக்கிழமை காலை தில்லி புறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், காலியாகும் இடங்களுக்கான தோ்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதில் திமுக, அதிமுக முன்னுறுத்திய ஆறு வேட்பாளா்களும் போட்டியின்றி தோ்வாகினா்.
இதில், திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் நாளை பதவியேற்கவுள்ளார். இதற்காக தில்லி புறப்பட்ட கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ”மக்களின் வாழ்த்துகளுடன் உறுதிமொழி எடுக்கவுள்ளேன். இது இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள மரியாதையும் கடமையும் ஆகும். பெருமையோடு செல்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
தில்லி செல்லும் கமல்ஹாசன், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பதற்கு முன்னதாக செய்ய வேண்டிய நடைமுறைகளை இன்று செய்யவுள்ளார்.
மாநிலங்களவையில் நாளை பதவியேற்றவுடன் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக கமல் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமலுடன் திமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்யப்பட்டுள்ள பி. வில்சன், கவிஞா் ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆா். சிவலிங்கம் ஆகியோரும் நாளை பதவியேற்கிறார்கள்.
அதிமுகவின் இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகிய இருவரும் திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.