ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் திங்கள்கிழமை காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
srivilliputtur andal temple adi poora car festival
கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்.
Published on
Updated on
2 min read

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் திங்கள்கிழமை காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ரெங்கமன்னாரை மணந்து கொண்டார். பெரியாழ்வாரின் அவதார விழாவான ஆனி சுவாதி திருவிழா மற்றும் பங்குனி திருக்கல்யாண விழாவில் செப்பு தேரோட்டமும், ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூர தேரோட்டமும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் 16 வண்டி சப்பரமும், 5ம் நாள் காலையில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு பெரியபெருமாள், ரெங்கமன்னார், திருவண்ணாமலை ஶ்ரீனிவாசபெருமாள், காட்டழகர் கோயில் சுந்தரராஜபெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளும் 5 கருட சேவை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 7-ம் நாள் இரவு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனித்திருக்கும் சயன சேவை உற்சவமும் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஆண்டாள் பூப்பல்லக்கிலும், ரெங்கமன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இரவு தேர் கடாட்சித்தல் வைபவம் நடைபெற்றது. திங்கள்கிழமை காலை தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு புஷ்பாஞ்சலியும், கண்ணாடி மாளிகையில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனமும் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் மஞ்சள் பட்டு உடுத்தியும், ரெங்கமன்னார் வெண்பட்டு உடுத்தியும் தனித்தனி தோளுக்கினியானியில் புறப்பாடாகி தேரில் எழுந்தருளினர்.

இமாச்சல் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக அறிவிப்பு

ஆண்டாளுக்கு ஶ்ரீரங்கம் மற்றும் அழகர் கோயிலில் இருந்து வந்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 9:10 மணிக்கு தேரோட்டம் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா,ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சி முருகன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். மேயர் சங்கீதா, எம்எல்ஏக்கள் மான்ராஜ், தங்கபாண்டியன், சீனிவாசன், எஸ்.பி கண்ணன், கோட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Summary

Thousands of devotees pulled the chariot of the Arulmigu Nachiyar (Andal) temple with fervour on the ninth day of Aadipooram festival at Srivilliputhur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com