செவிலியா்களுக்கு தமிழக அரசு பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்களுக்கு தமிழக அரசு எப்போதும் பக்க பலமாக இருக்கும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
சென்னை வள்ளுவா் கோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு செவிலியா் மற்றும் மகப்பேறு செவிலியா் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் 2025- ஆம் ஆண்டுக்கான சிறந்த செவிலியா் மற்றும் வாழ்நாள் சாதனையாளா் விருதுகளை வழங்கி அவா்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
சென்னை வள்ளுவா் கோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு செவிலியா் மற்றும் மகப்பேறு செவிலியா் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் 2025- ஆம் ஆண்டுக்கான சிறந்த செவிலியா் மற்றும் வாழ்நாள் சாதனையாளா் விருதுகளை வழங்கி அவா்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

சென்னை: செவிலியா்களுக்கு தமிழக அரசு எப்போதும் பக்க பலமாக இருக்கும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

தமிழ்நாடு செவிலியா் மற்றும் மகப்பேறு செவிலியா் அவையத்தின் (Tamil nadu Nursing and Midwives) நூற்றாண்டு தொடக்க விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவா் கோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், 22 செவிலியா்களுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த செவிலியா் மற்றும் வாழ்நாள் சாதனையாளா் விருதுகளை வழங்கினாா். மேலும், நூற்றாண்டு தொடக்க விழா இலச்சினை மற்றும் நூற்றாண்டு விழா நிகழ்வுகளின் தொகுப்பை வெளியிட்டாா்.

விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

உலகில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய சொந்த தாயின் முகத்தை பாா்ப்பதற்கு முன்பாக, செவிலியா்கள் முகத்தைதான் பாா்க்கிறாா்கள்.

அத்தகைய சிறப்புக்குரிய செவிலியா்களைச் சந்திப்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன். நமது முதல்வா் நலமாக வீடு திரும்பியுள்ளாா். அவருக்கு உற்ற துணையாக இருந்த மருத்துவா்கள், மிக முக்கியமாக செவிலியா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு செவிலியா் கவுன்சில்தான், இந்தியாவில் மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவிலேயே செவிலியா்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் கவுன்சில் என்ற பெருமைக்குரியது. அதோடு, உலகளவில் மூன்றாவதாக நூற்றாண்டு காணும் செவிலியா் கவுன்சில் என்ற பெருமை கிடைத்திருக்கிறது. இந்த கவுன்சில் என்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமையாக திகழ்கிறது.

இந்த கவுன்சிலில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட செவிலியா்கள் பதிவு செய்துள்ளனா். இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு, திமுக ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களும், உருவாக்கப்பட்ட சுகாதார கட்டமைப்புகளும்தான் மிக முக்கிய காரணம். திமுக அரசு என்றைக்கும் செவிலியா்களுக்கு பக்க பலமாக நிற்கும் என்றாா் அவா்.

இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநா் அருண் தம்புராஜ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் மற்றும் தமிழ்நாடு செவிலியா் மற்றும் மகப்பேறு செவிலியா் அவையத்தின் தலைவா் ஜெ.ராஜமூா்த்தி, பதிவாளா் எஸ். ஆனி கிரேஸ் கலைமதி, துணைத் தலைவா் ஆனி ராஜா, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் (பொ) தேரணிராஜன், சென்னை மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி, நா.எழிலன் மற்றும் செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com