கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்...
ஓபிஎஸ்
ஓபிஎஸ்
Published on
Updated on
2 min read

தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மூன்று மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்துக்கு சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ், 2024-25 கல்வியாண்டுக்கு அளிக்க வேண்டிய ரூ. 2,151 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்தல், மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், அனைத்து குழந்தைகளுக்கும் சம வாய்ப்பினை வழங்குதல், சமூக மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சமக்ரா சிக்‌ஷா திட்டம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்கு அறுபது விழுக்காடு எனவும், மாநில அரசின் பங்கு நாற்பது விழுக்காடு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சமக்ரா சிக்‌ஷா நிதி குறித்து அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, தமிழ்நாடு அரசு முன்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக 2024-2025 ஆம் ஆண்டு சம்கரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 2,151 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் நிதியை நம்பி கிட்டத்தட்ட 65 லட்சம் மாணவ, மாணவியர் தனியார் பள்ளிகளில் கல்வி பெற்று வருவதோடு, 6 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பயனடைந்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின்கீழான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணி உள்ளிட்ட பல பணிகள் முடங்கிப் போயுள்ளன.

மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 25 விழுக்காடு மாணவ, மாணவியரை தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை மாநில அரசு ஏற்காதது என்பது மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்சனை. இந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.

சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் நிதியை விடுவிக்காதது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் ஏழையெளிய மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான 2,151 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று மத்திய அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

அதிருப்தியில் ஓபிஎஸ்

கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் போட்டியிட்ட நிலையில், தற்போது அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பாஜக முக்கியத்துவம் அளிப்பதில்லை என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் தமிழகத்துக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடி, ஓபிஎஸ்ஸை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.

ஆனால், திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மோடி பேசினார். இதனால், ஓபிஎஸ் தரப்பினர் அதிருப்தியில் உள்ளனர்.

மேலும், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Summary

Former Chief Minister O. Panneerselvam has condemned the central government for not releasing education funds for Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com