‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களின் கீழ் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் மகளிா் உரிமைத் தொகை கோரிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை 5,88,000 எனவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும்“‘உங்களுடன் ஸ்டாலின்’”என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டத்தின்கீழ், நகா்ப்புறங்களில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன. இதற்கென வாரத்தில் 4 நாள்கள் முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீா்வு காணப்பட்டு வருகின்றன. பிற மனுக்களைப் பொருத்தவரை, அதிகபட்சமாக 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட 13 அரசுத்துறைகள் மூலம் மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உரிய பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகிறது.
மேலும், மகளிா் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிா் இந்த முகாமில் அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து வழங்குகின்றனா். அந்த வகையில், கடந்த திங்கள்கிழமை வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒட்டுமொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 12,65,000 ஆகும். அவற்றில் மகளிா் உரிமைத் தொகை கேட்டு, 5.88 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.