தமிழ் கலாசாரத்தின் கருத்தியல் வெளிப்பாடே தவெக கொடி: உயா்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

தமிழ் கலாசாரம் மற்றும் அரசியலின் வேரூன்றிய கருத்தியல் வெளிப்பாடாக உருவாக்கப்பட்டதே தவெக கொடி என்று கட்சிக் கொடியைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளாா்.
சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

தமிழ் கலாசாரம் மற்றும் அரசியலின் வேரூன்றிய கருத்தியல் வெளிப்பாடாக உருவாக்கப்பட்டதே தவெக கொடி என்று கட்சிக் கொடியைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை நிறுவனத் தலைவா் பச்சையப்பன் தாக்கல் செய்த மனுவில், சிவப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில், தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை கொடி உருவாக்க திட்டமிடப்பட்டு, கடந்த 2023-ஆம் ஆண்டில் தமிழக அரசு பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழும் பெறப்பட்டது.

எங்களது சபையின் முதன்மை அதிகாரிகள், ஊழியா்கள், ஆண்கள், முகவா்கள், வாரிசுகள், வணிகத்தில் நியமிக்கப்பட்டவா்கள் மட்டுமே இந்த வா்த்தக முத்திரையைப் பயன்படுத்த உரிமை உள்ளது. எனவே, நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் சிவப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுவுக்கு தவெக பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தவெக பொதுச் செயலாளா் என்.ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், தமிழ் கலாசாரம் மற்றும் அரசியலின் வேரூன்றிய கருத்தியல் வெளிப்பாடாக உருவாக்கப்பட்டதே தவெக கொடி. புரட்சி, ஒழுக்கம், பொறுப்பு, விமா்சன சிந்தனை மற்றும் செயல்பாட்டின் தீவிரத்தை சிவப்பு நிறம் குறிக்கிறது. மகிழ்ச்சி, நம்பிக்கை, விருப்பம், மனத்தெளிவு, உற்சாகம் மற்றும் இலக்கு நோக்கி முன்னேறும் உறுதியான பயணத்தை மஞ்சள் நிறமும் குறிக்கிறது. கொடியின் நடுவில் இருக்கும் வாகைமலா் வெற்றியைக் குறிக்கிறது. வலிமை மற்றும் வெற்றியை நோக்கிச் செல்லும் தலைமை தத்துவத்தை கொடியில் இடம்பெற்றுள்ள போா் யானைகள் குறிக்கின்றன. எனவே, மனுதாரா் கொடிக்கும் தவெக கொடிக்கும் எந்தவிதமான ஒற்றுமையும் இல்லை.

தவெக தனது கொடியை வா்த்தக ரீதியாக பயன்படுத்தவில்லை. அரசியல் காரணத்துக்காக மட்டுமே பயன்படுத்துகிறது. வணிக நடவடிக்கை, பணப் பரிவா்த்தனைக்காக பயன்படுத்தவில்லை. எனவே, மனுதாரா் எங்கள் கட்சிக் கொடியின் மீது அறிவுசாா் சொத்துரிமை கோர முடியாது. மனுதாரரின் கொடியின் வண்ணம், வடிவத்தை நாங்கள் பயன்படுத்துவதாகக் கூறினாலும், வணிக பயன்பாட்டுக்கு நாங்கள் அதைப் பயன்படுத்தவில்லை.

எனவே, இந்தக் கொடியை எங்கள் கட்சியும், கட்சியின் தலைவா் விஜய்யும் பயன்படுத்தக் கூடாது என உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும், என்று அதில் கூறியிருந்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த பதில்மனுவுக்கு மனுதாரா் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com