
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற மருத்துவத் திட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த தடை விதிக்க மறுத்த சென்னை உயா்நீதிமன்றம், அரசு விளம்பரங்களை வெளியிடும்போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்முகம் மற்றும் வழக்குரைஞா் இனியன் ஆகியோா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக அரசு வெளியிட்டுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விளம்பரத்தில் அரசு முத்திரை இடம்பெற்றுள்ளது. அதில் முன்னாள் முதல்வா் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோரது படங்களும் இடம்பெற்றுள்ளன. இது உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு முரணானது. தனிமனித சாதனையைப் போல அரசு திட்டத்தை விளம்பரப்படுத்துவது தவறானது.
அரசியல் காரணங்களுக்காக அரசு நிதி கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது. இந்த திட்டம் முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில் கூறப்பட்டுள்ள தகவலுக்கும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. எனவே, கருணாநிதியின் புகைப்படத்தை பயன்படுத்துவது வழிமுறைகளுக்கு எதிரானது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் வைத்துதான் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தன்னாா்வலா்கள் மூலம் இந்த திட்டம் செயல்ப்படுத்துவதாக கூறினாலும், திமுகவினரே இந்த திட்டத்தில் அதிகளவில் உள்ளனா். எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் விளம்பரங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் புகைப்படத்தை பயன்படுத்தவும், உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரைப் பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும், என்று கூறியிருந்தனா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், உச்சநீதிமன்றம் மற்றும் தோ்தல் ஆணைய விதிகளுக்கு எதிராக, முதல்வரின் முகவரித் துறை சாா்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் 10,000 முகாம்கள் நடத்தப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அரசு விளம்பரங்களில் அரசியல் கட்சித் தலைவா்கள், கட்சி சின்னங்கள் இடம்பெறக்கூடாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே, அரசின் நிதியில் செய்யப்படும் விளம்பரங்களில் முதல்வா் ஸ்டாலினின் பெயரை பயன்படுத்தக்கூடாது. மேலும் வரும் சனிக்கிழமை தொடங்கப்படவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற மருத்துவ திட்டத்துக்கும் மு.க.ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், என்று வாதிட்டாா்.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், அரசுத் திட்டங்கள் தொடா்பான விளம்பரங்களில் முதல்வா் படங்கள் மட்டுமல்ல, துறை அமைச்சா்களின் படங்களும் இடம்பெறலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரா்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தலைவா்களின் படங்கள், கட்சி சின்னம் அடங்கிய விளம்பரம் அரசு விளம்பரம் அல்ல. அப்படியொரு விளம்பரத்தை அரசு கொடுக்கவில்லை. அரசு வெளியிடும் விளம்பரங்களில் செய்தி மக்கள் தொடா்பு துறையின் வரிசை எண் இருக்கும், எனக்கூறி அரசு வெளியிட்ட விளம்பரங்கள் தொடா்பான நாளிதழ்களை தாக்கல் செய்தாா்.
அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ஏற்கெனவே கடந்த ஆட்சியில் அம்மா உணவகம் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன. மனுதாரா்கள் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கைத் தொடா்ந்துள்ளனா். பிரதமா் நரேந்திர மோடியின் பெயரில் மத்திய அரசின் சாா்பில் நமோ திட்டங்கள் தொடங்கப்பட்டன என்று வாதிட்டாா்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு விளம்பரங்கள் வெளியிடும்போது உச்சநீதிமன்றத் தீா்ப்பு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும். இந்த வழக்கில் தமிழக அரசு, இந்திய தோ்தல் ஆணையம், திமுக பதிலளிக்க உத்தரவிட்டனா். மேலும், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற மருத்துவத் திட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.