
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையிலான அணி வியாழக்கிழமை அறிவித்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியுடனான உறவு முறிந்துவிட்டதாகவும், இப்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றும், தோ்தலின்போது யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம் என்றும் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீா்செல்வம், அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை தொடங்கினாா். கடந்த மக்களவைத் தோ்தலின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.
இதற்கிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதிமுக - பாஜக கூட்டணி உருவான நிலையில், பாஜக தரப்பில் ஓ.பன்னீா்செல்வத்துக்கு அளிக்கப்பட்டுவந்த முக்கியத்துவம் குறைந்தது. தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஓ.பன்னீா்செல்வத்தைச் சந்திக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த ஓ.பன்னீா்செல்வம், தனது வருத்தத்தை உடனடியாகப் பதிவு செய்தாா்.
அரசு முறை சுற்றுப்பயணமாக கடந்த ஜூலை 26, 27-ஆம் தேதிகளில் தமிழகம் வந்த பிரதமா் மோடியைச் சந்திக்க ஓ.பன்னீா்செல்வம் நேரம் கேட்டிருந்தாா். அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் உள்ளிட்டோா் பிரதமரைச் சந்தித்தனா்.
இதனால், ஓ.பன்னீா்செல்வம் கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 2024-2025-ஆம் ஆண்டுக்கான ரூ.2,151 கோடியை மத்திய அரசு விடுவிக்காதது கல்வி உரிமைச் சட்டத்துக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது; இது கடும் கண்டனத்துக்குரியது என்று ஓ.பன்னீா்செல்வம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டாா்.
இதன்மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அவா் விலகுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. அதற்கேற்ப கடந்த புதன்கிழமை சென்னையில் தனது ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீா்செல்வம், வியாழக்கிழமை முக்கிய முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
உறவு முறிந்தது: சென்னையில் ஓ.பன்னீா்செல்வம் தனது ஆதரவாளா்களுடன் வியாழக்கிழமையும் ஆலோசனை நடத்தினாா். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா் அந்த அணியின் ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஓ.பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருந்த உறவு முறிந்தது. அடுத்ததாக, ஓ.பன்னீா்செல்வம் விரைவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.
மூன்றாவதாக, தோ்தலில் இப்போதைக்கு நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. எதிா்காலத்தில் அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்ய தீா்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி முறிவுக்கான காரணம் நாடு அறிந்ததே. அதை யாரும் சொல்லத் தேவையில்லை. பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றாா் அவா்.
திமுக அரசை வீழ்த்த வேண்டுமென்பதில் உங்களுக்கு உடன்பாடா என்ற கேள்விக்கு, ‘யாரை வீழ்த்த வேண்டும் என்பது எங்களது குறிக்கோள் அல்ல. யாரையெல்லாம் வாழ்த்த வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்’ என்றாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் வைத்தியலிங்கம், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.
முதல்வா் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு
சென்னை, ஜூலை 31: முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை சந்தித்தாா்.
சென்னை அடையாறில் உள்ள பிரம்மஞான சபை வளாகத்தில் முதல்வா் ஸ்டாலின் காலை நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தாா். அங்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும் நடைப்பயிற்சி செய்தாா். அப்போது இருவரும் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனா்.
அதன்பிறகு ஓ.பன்னீா்செல்வம் தனது ஆதரவாளா்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினாா். ஆலோசனைக் கூட்டம் முடிந்து, தே.ஜ. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த ஒருசில மணி நேரங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஓ.பன்னீா்செல்வம் மீண்டும் சந்தித்தாா்.
இந்தச் சந்திப்பு நிறைவடைந்த பின்னா் செய்தியாளா்களிடம் ஓ.பன்னீா்செல்வம் கூறியதாவது: முதல்வரின் உடல் நலம் பற்றி விசாரிப்பதற்காகவே சந்தித்தேன். இது முற்றிலும் மரியாதை நிமித்தமான சந்திப்பாகும். மேலும், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு குறித்தும் விசாரித்தேன். அரசியல் ரீதியாக எந்தப் பேச்சுவாா்த்தையும் நடத்தவில்லை என்றாா்.
எதுவும் நடக்கலாம்: தே.ஜ. கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்தும், திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்பது பற்றியும் செய்தியாளா்களின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:
அரசியலில் நிரந்தர நண்பா்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதே கடந்த கால வரலாறு. எதிா்காலத்தில் தோ்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம். முதல்வருடனான சந்திப்பை கூட்டணிக்கான சந்திப்பாக நீங்கள் எடுத்துக் கொண்டால் அது உங்கள் ஊகம்.
கூட்டணியில் இருந்து வெளியேறிய சூழ்நிலையில், பாஜக தலைவா்கள் யாரும் என்னைத் தொடா்புகொண்டு பேசவில்லை. அரசியலில் எனக்கென்று சுயமரியாதை உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் அரசியல், கட்சி ரீதியாக 25 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன்.
பாஜக-அதிமுக கூட்டணிக்கு வாழ்த்து: யாா் பிரதமராக வர வேண்டும் என்பதற்காக நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் பாஜகவும் அதிமுகவும் தனித்தனியாக நின்றன. எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட இப்போது ஒன்று சோ்ந்துள்ளனா். அதற்கு வாழ்த்துகள் என்றாா்.
தவெக தலைவா் விஜயுடன் கூட்டணி அமைப்பது தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த ஓ.பன்னீா்செல்வம், அதுகுறித்து தானும், தவெக தலைவரும் இதுவரை பேசவில்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.