ஆக. 2 முதல் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள்! என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்?

தமிழக அரசின் 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்கள் பற்றி...
M.K. Stalin
முதல்வர் மு.க. ஸ்டாலின்கோப்புப்படம்
Published on
Updated on
3 min read

தமிழக அரசின் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் தொடக்கிவைக்க இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த முகாம்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவும் - மக்கள் பயன்படுத்திக்கொள்ளவும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

2021 ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற உன்னதமான நோக்கத்தை நமது திட்டங்கள் வழியாகச் செயல்வடிவத்தில் கொண்டுவந்து, தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் முன்னேறிய மாநிலமாக உயர்த்திக் காட்டியிருக்கிறோம்.

அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்டத்து வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி என்ற அடிப்படையில், ஒவ்வொரு மனிதரின் தேவைகள், கோரிக்கைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைச் செய்து தரும் வகையில், அனைத்துத் திட்டங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து, மருத்துவச் சேவைகளைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணத்தைச் செயல்வடிவமாக்க, பல்வேறு ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு ஒரு திட்டத்தை உருவாக்கினோம்.

அதனடிப்படையில் மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர், கடந்த 21.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், “உயர் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்” என்று அறிவித்தார். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, எதிர்வரும் ஆகஸ்ட் 2-ஆம் நாளன்று “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்களை, சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளேன்.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்களில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1,164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒருமுகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 லட்சத்திற்குக் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இம்முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வி துறை, உயர்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி / கல்லூரி வளாகங்களில் இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இம்முகாம்களில் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்துப் பயனாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்த சர்க்கரை, சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் (யூரியா, கிரயாட்டினின்) செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும்.

அனைத்துப் பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு (ம) தொண்டை மற்றும் பல் மருத்துவச் சேவைகள் வழங்கப்படவுள்ளது. மேலும், பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்-ரே (X-Ray), எக்கோகார்டியோகிராம்(Echocardiogram), அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (USG) மற்றும் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் (ம) மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன.

இம்முகாமில் பங்குகொள்ளும் பயனாளர்களுக்குக் கீழ்க்கண்ட மருத்துச் சேவைகள் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வழங்கப்பட உள்ளன.

➢ பொது மருத்துவம்,

➢ பொது அறுவை சிகிச்சை மருத்துவம்,

➢ இருதய மருத்துவம்,

➢ எலும்பியல் மருத்துவம்,

➢ நரம்பியல் மருத்துவம்,

➢ தோல் மருத்துவம்,

➢ காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம்,

➢ மகப்பேறு மருத்துவம்,

➢ இயன்முறை மருத்துவம்,

➢ பல் மருத்துவம்,

➢ கண் மருத்துவம்,

➢ மனநல மருத்துவம்

➢ குழந்தைகள் நல மருத்துவம்

➢ நுரையீரல் மருத்துவம்

➢ நீரிழிவு நோய் மருத்துவம்

➢ கதிரியக்கவியல் மருத்துவம்

மேற்சொன்ன பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் மட்டுமின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் இம்முகாமிலேயே வழங்கப்பட உள்ளன. இம்முகாம்களின் விரிவான தரவுத் தொகுப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் பின்தொடர் சிகிச்சை நடவடிக்கைகள், நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை (HMIS 3.0) வாயிலாகக் கண்காணிக்கப்பட உள்ளன.

ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, பெண்களுக்கான கருப்பை வாய்ப்புற்று (ம) மார்பக புற்றுநோய் ஆகியவற்றை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை(HMIS 3.0) மூலம் கண்காணிக்கப்படும் இம்முழு உடல் பரிசோதனை முகாமானது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக உயர்தரமான மருத்துவச் சேவைகள் பொதுமக்களுக்கு அவர்கள் வாழுமிடங்களுக்கு அருகிலேயே கிடைக்க இருக்கின்றன.

இந்த முகாமை அனைத்து பொதுமக்களும், குறிப்பாக “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் நடத்தப்படும் முதற்கட்ட பரிசோதனையின் அடிப்படையில் மருத்துவ நிபுணர்களின் விரிவான பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் இந்த முகாமில் அவசியம் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

Summary

Chief Minister M.K. Stalin has announced that the Tamil Nadu government's 'Nalam Kaakum Stalin' medical camps will be inaugurated in Chennai on August 2nd.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com