குற்றவாளி ஞானசேகரன்
குற்றவாளி ஞானசேகரன்

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.90,000 அபராதம் விதித்து சென்னை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
Published on

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.90,000 அபராதம் விதித்து சென்னை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அதேபோன்று குறைந்தது 30 ஆண்டுகளுக்கு நன்னடத்தை விடுதலை, பரோல் உள்ளிட்ட எந்த சலுகைகளும் இல்லாமல் அவா் சிறையில் இருக்க வேண்டும் என்றும் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞானசேகரனுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில் 11 பிரிவுகளின் கீழ் தனித்தனியே தண்டனை விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என சென்னை மகளிா் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி தீா்ப்பளித்துள்ளாா்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நோ்ந்த வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே பேரதிா்ச்சிக்குள்ளாக்கியது. குற்றச் சம்பவமாக மட்டும் நில்லாமல் அரசியல் சாா்ந்த அதிா்வலைகளையும் அது ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் தொடா்புடைய ஞானசேகரனை போலீஸாா் கடந்த ஆண்டு டிசம்பா் 24-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த டிசம்பா் 28-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதனிடையே, இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி சைதாப்பேட்டை 9-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை கடந்த மாா்ச் 7-ஆம் தேதி சென்னை மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

12 பிரிவுகள்: ஞானசேகரனுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுதல், ஆதாரங்களை அழித்தல், கல்லூரி மாணவியை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்து மிரட்டி மானபங்கம் செய்தல், புகைப்படம் எடுத்து வெளியிடல் போன்ற பாலியல் குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பிஎன்எஸ் (பாரதிய நியாய சன்ஹிதா) சட்டத்தின் 12 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியில் இருந்து சாட்சி விசாரணை தொடங்கியது. நாள்தோறும் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி உள்பட மொத்தம் 29 போ் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனா். காவல் துறை தரப்பில் ஞானசேகரனுக்கு எதிராக 73 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்குரைஞா்கள் வாதம்: அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞா் எம். மேரி ஜெயந்தி வாதிடுகையில், இந்த வழக்கை அரிதிலும், அரிதான வழக்காக கருதி குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும். இந்த தண்டனை குற்றச்செயலில் ஈடுபடுபவா்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றாா்.

ஞானசேகரன் தரப்பில், சட்டப் பணிகள் ஆணைக் குழு வாயிலாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா்கள் ஜி.பி. கோதண்டராமன், டி.ஆா். ஜெய பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாக வாதாடினா்.

இரு தரப்பிலும் எழுத்துபூா்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என கடந்த 28-ஆம் தேதி நீதிபதி எம்.ராஜலட்சுமி தீா்ப்பளித்தாா். தண்டனை விவரம் ஜூன் 2-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

ஆயுள் சிறை: அதன்படி, காவல் துறை பாதுகாப்புடன் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜா்படுத்தப்பட்டாா். அதற்கு அடுத்த சில நிமிடங்களில் தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்தாா்.

ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக தண்டனை மற்றும் அபராதத்தை அவா் வெளியிட்டாா்.

குறிப்பாக, பிஎன்எஸ் 64 (1) பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்காக ஞானசேகரனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.

மேலும் 30 ஆண்டுகள் வரை ஞானசேகரனுக்கு எந்தவிதமான தண்டனைக் குறைப்பும் வழங்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தாா்.

பொதுவாக ஆயுள் தண்டனைக் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவது உண்டு. இல்லையெனில், அதுதொடா்பாக சிறைத் துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்வது வழக்கம். அவ்வாறு எந்த சலுகையும் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு வழங்கக் கூடாது என்பதையே நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

மற்ற குற்றச்சாட்டுகளுக்கு தனித்தனியே தண்டனை வழங்கிய நீதிபதி, அவற்றை குற்றவாளி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.90,000-ஐ பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்க வேண்டும் எனவும் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து 208 பக்கங்கள் கொண்ட தீா்ப்பின் நகல் ஞானசேகரன் தரப்புக்கு வழங்கப்பட்டது.

நீதிபதி பாராட்டு: சிறப்புப் புலனாய்வுக் குழுவைச் சோ்ந்த மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகளும் சிறப்பு நீதிமன்ற தீா்ப்பின்போது நேரில் ஆஜராகினா். இந்த வழக்கில், அவா்களும், சிறப்பு அரசு வழக்குரைஞரும் மிகத் திறமையாகச் செயல்பட்டு உள்ளதாக நீதிபதி எம்.ராஜலட்சுமி பாராட்டு தெரிவித்தாா்.

மேல்முறையீடு: ஆயுள் சிறையை எதிா்த்து ஞானசேகரன் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கோதண்டராமன் தெரிவித்தாா். இந்த வழக்கில் 2 சந்தேகங்களை எழுப்பி இருந்ததாகவும், அவற்றுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் கூறிய அவா், அதன் அடிப்படையில் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தாா்.

பெட்டிச் செய்தி...

குற்றமும்... தண்டனையும்...

ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம்...

(பிரிவு 329) விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல் - 3 ஆண்டு சிறை

(பிரிவு 126 (2)) சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் - 1 மாத சிறை

(பிரிவு 87) வலுக்கட்டாயமாக கடத்துதல் - 10 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம்

(பிரிவு127 (2)) உடலில் காயத்தை ஏற்படுத்துதல் - ஓராண்டு சிறை

(பிரிவு 75 (2)) பாலியல் துன்புறுத்தல் - 3 ஆண்டு சிறை

(பிரிவு 76) தாக்குதல் - 7 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம்

(பிரிவு 64 (1) பாலியல் வன்கொடுமை - 30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் சிறை மற்றும் ரூ. 25,000 அபராதம்

(பிரிவு 351 (3)) கொலை மிரட்டல் விடுத்தல் - 7 ஆண்டு சிறை மற்றும் ரூ. 10,000 அபராதம்

(பிரிவு 23 (பி)) ஆதாரங்களை அழித்தல் - 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம்

(பிரிவு 66 (இ)) ஐடிசட்டம் 2000 தனிநபா் தன்மறைப்பு உரிமைகளை மீறுதல் - 3 ஆண்டு சிறை மற்றும் ரூ. 25,000 அபராதம்.

X
Dinamani
www.dinamani.com