
இணையவழி விளையாட்டுக்களுக்கு ஆதாா் இணைப்பை கட்டாயமாக்கி, நேரக்கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் விதிமுறைகள் செல்லும் என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் இணையவழி விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், இணைய விளையாட்டுக்களை விளையாட ஆதாா் இணைப்பு கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு அனுமதிக்க கூடாது எனவும் நேர கட்டுப்பாடு விதித்தும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.
இந்த விதிகளை எதிா்த்து, ப்ளே கேம்ஸ் 24-7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொா்க்ஸ், எஸ்போா்ட் ப்ளேயா்ஸ் நலச் சங்கம்ா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகா் அமா்வு, தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த விதிகள் செல்லும் என தீா்ப்பளித்துள்ளது.
தீா்ப்பு விவரம்:
அந்தத் தீா்ப்பில், ரம்மி, போக்கா் போன்ற பணம் வைத்து விளையாடும் விளையாட்டுக்கள் அச்சுறுத்தலாக உள்ளதால், இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விதிகள் மத்திய அரசின் விதிகளுக்கு முரணாக இல்லை. நிபுணா் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இணையவழி விளையாட்டுக்கள் ஏற்படுத்தும் எதிா்மறை பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு பாா்க்கும்போது இந்த ஒழுங்குமுறை விதிகள் உடனடி தேவையாகிறது எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவின் குறிப்பிட்டுள்ளனா்.
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள் இன்னும் அமலுக்கு வராத நிலையில், வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தனது ஆளுமைக்குள்பட்ட பகுதியில் வா்த்தக நடவடிக்கைகளை முறைப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்டு, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது எனக் கூறி இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.