
வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் விவசாயி ஆத்திரம்: நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்!
வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், தேக்கல்பட்டி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி (52). இவரது மனைவி லட்சுமி(48).
இவர்களுக்கு மாதேஷ்(29), சுரேஷ்(27) ஆகிய இரண்டு மகன்களும், பரமேஸ்(24) என்ற ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். வெவ்வேறு பிரிவினரை சேர்ந்த குப்புசாமி, லட்சுமி இருவரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு தேக்கல்பட்டி விவசாய தோட்டத்தில் வசித்து வருகின்றனர்.
தேக்கல்பட்டி மந்தகாடு பகுதியிலுள்ள மற்றொரு விவசாய தோட்டத்தில் சுரேஷ் அவரது மனைவி அனிதா, இவர்வர்களின் மகன் சர்வபுத்திரன் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்தனர். திங்கள்கிழமை காலை சுரேஷ் கூலி வேலைக்கு வெளியே சென்றார்.
மதியம் விவசாயி குப்புசாமி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது குப்புசாமியும், லட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. குப்புசாமி மரக்கட்டையால் லட்சுமியை தலையில் தாக்கியுள்ளார். அப்போது மாமியார் லட்சுமிக்கு ஆதரவாக மருமகள் அனிதா தன் மகன் சர்வபுத்திரனை இடுப்பில் சுமந்தபடி சென்று குப்புசாமியை தடுத்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த குப்புசாமி அரசு அனுமதி இன்றி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் மருமகள் அனிதாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். நாட்டு துப்பாக்கியில் இருந்து பாய்ந்த இரும்பு பால்ரஸ் குண்டுகள் சிறுவன் சர்வபுத்திரன் மற்றும் அனிதா ஆகிய இருவர் மீது மீதும் பாய்ந்தது. இதனால் இருவரும் வலியால் அலறி துடித்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு வாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதிக காயமடைந்த சிறுவன் சர்வபுத்திரன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். குண்டு காயங்களுடன் அனிதா மற்றும் தலையில் பலத்த காயத்துடன் மாமியார் லட்சுமி இருவரும் வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான விவசாயி குப்புசாமியை வாழப்பாடி போலீசார் தேடி வருகின்றனர். நாட்டு துப்பாக்கியால் மாமனார் சுட்டதில் மருமகள் மற்றும் பேரன் பலத்த காயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: பிரதமா் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை குழு கூட்டம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.