ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடி நுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியது பற்றி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவு.
anbumani ramadoss
அன்புமணி ராமதாஸ் ENS
Published on
Updated on
1 min read

ஐஐடி நுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான ஜேஇஇ - அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கல்வியில் பெரும் புரட்சி செய்துவிட்டதாக திமுக அரசு போலி பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், ஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

ஜேஇஇ - அட்வான்ஸ்டு  நுழைவுத்தேர்வில் மேற்கு வங்கம் 35.3 விழுக்காட்டுடன் முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் 34.70%, ராஜஸ்தான் 34.50%,  மகாராஷ்டிரம் 32.40%, ஹரியாணா 32.30% என அடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு 23.90% தேர்ச்சி விகிதத்துடன் கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்தத் தேர்வை எழுதிய 7,787 பேரில் 1,859 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கேரளம், பிகார் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும்தான் தமிழ்நாட்டைவிட பின்தங்கியுள்ளன.

ஐஐடி நுழைவுத்தேர்வுகளில் தமிழ்நாடு மிகவும் பின் தங்கியிருப்பதற்கு காரணம், அத்தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மாநிலப் பாடத்திட்டம் வலிமையாக இல்லாததுதான். கடந்த பல ஆண்டுகளாகவே ஐஐடி நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக மாநிலப் பாடத்திட்டத்தைவலுப்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வரும் போதிலும் அதற்கான நடவடிக்கைகளை தமிழகத்தை ஆளும் அரசுகள் எடுக்கத் தவறிவிட்டன. அதனால்தான் ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் தமிழகத்தின் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது.

போட்டித்தேர்வுகளையும் நுழைவுத் தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், அதற்கான பயன்கள் எதுவும் களத்தில் தெரிவதில்லை. இந்த நிலையை மாற்றும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மாநிலப் பாடத்திட்டத்தை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com