செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள 14 வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி...
செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
Published on
Updated on
1 min read

உணவகங்களில் பின்பற்ற வேண்டிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைஃபாய்டு மற்றும் மஞ்சள் காமலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி, மருத்துவத் தகுதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரைப் பகுப்பாய்வு செய்து, பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும்.

உணவுப் பொருள்களை ஈக்கள்/பூச்சிகள் மொய்க்காதவண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து காட்சிபடுத்த வேண்டும்.

உணவு எண்ணெயை ஒருமுறை மட்டுமே சமைக்கப் பயன்படுத்த வேண்டும். மீதமான பயன்படுத்திய உணவு எண்ணெயை, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(FSSAI) அங்கீகரித்த கொள்முதலாளருக்கும் மட்டும் விற்க வேண்டும்.

விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்திடல் வேண்டும்.

நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப் படும் வகையில் பரிமாறவோ/பொட்டலமிடவோ கூடாது.

அனுமதிக்கப்படாத நெகிழியில் (பிளாஸ்டிக்) உணவுப் பொருள்களை சூடாகவோ அல்லது இயல்பு நிலையிலோ பொட்டலமிடக் கூடாது.

உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர்/அலுமினியம் ஃபாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்படாத நெகிழியினை (பிளாஸ்டிக்) பயன்படுத்தக் கூடாது.

எவ்வகை உணவு எண்ணெய்களையும் லேபிள் விபரங்களின்றியும் பொட்டலமிடாமல் சில்லறை அடிப்படையிலும் நுகர்வோருக்கு விற்பனை செய்தல் கூடாது.

உணவைக் கையாளுபவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றைத் தவறாமல் அணிய வேண்டும்.

பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருள்களை கொள்முதல்/விற்பனை செய்யும் போது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய உரிம எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விபரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உணவு சமைக்க மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவகங்கள்/பேக்கரி/இனிப்பகங்கள் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் அயோடின் கலக்காத உப்பு இருக்கக் கூடாது.

சிக்கன்-65. பஜ்ஜி, கோபி-65 போன்ற உணவுப் பொருள்களில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது.

உணவு வணிகர்கள் அனைவரும் இவ்வறிவிப்பைக் கண்ட 14 தினங்களுக்குள் மேற்கூறியவற்றை தவறாது பின்பற்றிட வேண்டுமென அறிவிக்கப்படுகின்றது. தவறும்பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்பின்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com