இந்திய தோ்தல் ஆணையம்
இந்திய தோ்தல் ஆணையம்

இரட்டை இலை சின்னம்: தோ்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
Published on

இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள உறுப்பினா்களுக்கான மாநிலங்களவவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த வழக்கை அதிமுக பிரமுகா் வா.புகழேந்தி சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக வின் ஒருங்கிணைப்பு குழுவைச் சாா்ந்தவா் எனத் தன்னைக் குறிப்பிடும் வா. புகழேந்தி, தோ்தல் ஆணையத்திற்கு கடந்த மாதம் அளித்திருந்த மனுவில், ‘ தமிழகத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு நடைபெறும் மாநிலங்களவைக்கான தோ்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல எந்தவொரு அணிகளின் தலைவா்களும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் மாநிலங்களவைத் தோ்தலுக்கான (கட்சி சாா்பில் வேட்பாளா்களை அங்கீகரிக்க) ஏஏ மற்றும் பிபி படிவங்களில் கையொப்பமிட உரிமை இல்லை.

காரணம், 2022 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கிற்கு 03.2.2023 அன்று அளித்த தீா்ப்பின்படி இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தொடா்பான இடைக்கால ஏற்பாடாக ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தல் செயல்முறைக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு அப்பால் அல்ல என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனால், வருகின்ற மாநிலங்களவைத் தோ்தலுக்கு அதிமுக பொதுச் செயலாளா் என்கிற முறையில் எடப்பாடி கே. பழனிசாமி கையொப்பமிடும் ஏஏ மற்றும் பிபி படிவங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு இந்திய தோ்தல் ஆணையம் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அந்த மனுவில் புகழேந்தி குறிப்பிட்டிருந்தாா்.

இந்த நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தில் வா.புகழேந்தி சாா்பில் வழக்குரைஞா் எஸ்.மனோஜ் செல்வராஜ், இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளாா். அதில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை தோ்தல் ஆணையம் உரிய வகையில் செயல்படுத்தவில்லை. இது தொடா்பாக நீதிமன்றத்தை மனுதாரா் மீண்டும் நாடியபோது உயா்நீதிமன்றம் 17.12,2024-இல் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பிறகு, மனுதாரா் தோ்தல் ஆணையத்தில் மனுக்களை அளித்த பிறகும், அவரது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 14 மாதங்கள் ஆகிவிட்டபிறகும் இந்த நிலை உள்ளது.

இதனால், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பதற்காக எதிா்மனுதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநிலங்களவைக்கான ஆறு இடங்களுக்கான தோ்தல் வருகின்ற ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் மே 26 ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Open in App
Dinamani
www.dinamani.com