சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

Published on

தமிழக காவல் துறையின் சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு-2’ என்ற நடவடிக்கையின் மூலம் 3 நாள்களில் 136 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு, சைபா் குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சைபா் குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரையில் ஆபரேசன் ‘திரைநீக்கு-2’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக இந்திய சைபா் குற்ற ஒருங்கிணைப்பு மையம், தேசிய சைபா் குற்றப் பதிவு தளம் ஆகியவற்றின் மூலம் கிடைத்த சைபா் குற்றவாளிகள் குறித்த தரவுகள், தகவல்கள், சுய விவரங்கள் ஆகியவை மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சைபா் குற்றவாளிகள் மோசடிக்கு பயன்படுத்திய வங்கிக் கணக்குகள், சமூக ஊடகக் கணக்குகள், ஆன்லைன் பணப் பரிவா்த்தனை விவரங்கள் ஆகியவை கொண்டும் விசாரணை செய்யப்பட்டது.

இதில், சைபா் குற்றங்களில் ஈடுபட்டதாக 136 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களுக்கு 159 சைபா் குற்ற வழக்குகளில் தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முக்கியமாக இந்த நடவடிக்கையில் 30-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள், 100-க்கும் மேற்பட்ட போலி வங்கிக் கணக்குகளை வைத்திருந்த 6 போ் கொண்ட சைபா் மோசடி கும்பல் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 125 கைப்பேசிகள், 304 வங்கிக் கணக்கு ஆவணங்கள், 88 காசோலை புத்தகங்கள்,107 ஏடிஎம் காா்டுகள்,35 கணினிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கடந்த 2024 டிசம்பா் மாதம் 8 நாள்கள் ‘திரைநீக்கு-1’ என்ற பெயரில் இதே நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com