
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் தனித்தனியாக பாராட்டு விழா நடைபெற்றது.
பெங்களூரு விதானசெளதாவின் முன்பகுதியில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில், ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விராட் கோலி மற்றும் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், விதானசெளதாவில் இருந்து சின்னசாமி மைதானம் வரை நடைபெறவிருந்த பேரணி ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, 35,000 இருக்கைகள் மட்டுமே கொண்ட சின்னசாமி மைதானத்துக்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதில், ஒருவர் மீது ஒருவர் தவறி விழுந்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். 33 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களில் திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.
உடுமலைபேட்டையைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளரின் மகள் காமாட்சி தேவி (வயது 27) என்பவர் பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், ஆர்சிபி வீரர்களை காணும் ஆர்வத்தில் மைதானத்துக்கு சென்ற காமாட்சி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர், இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.