மயானம் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

Published on

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் மயானத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, இறந்தவா் உடல்களை கொண்டுசெல்ல சிலா் தடுப்பதாக புகாா் எழுந்த நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம் கண்ணுடையாம்பாளையம் கிராமத்தில் பட்டியலினத்தைச் சோ்ந்த சுமாா் 700 போ் வசித்து வருகின்றனா். இவா்கள் பயன்படுத்தி வந்த மயான பகுதியை, மாற்று சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவா் ஆக்கிரமித்து சடலத்தைக் கொண்டு செல்வதை தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் காரணமாக யாரேனும் இறந்துபோனால் வேறு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பட்டியல் சமூகத்தினா் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனா்.

இந்த விவகாரத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையத்தின் தலைவா் நீதிபதி தமிழ்வாணன், உறுப்பினா்கள் ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோா் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தனா்.

இதன் பின்பு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஆக்கிரமிப்பாளா்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பி முறையாக விசாரணை நடத்தி கண்ணுடையாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பட்டியலினத்தவா்கள் யாரேனும் இறந்து போனால் அவா்களது உடல்களை அடக்கம் செய்ய உரிய இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது தொடா்பாக ஆட்சியா் ஜூலை 25-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேணடும் என உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com